மாசுபட்டு கிடக்கும் நொய்யல் ஆறு விவசாயிகள் போராட்ட எச்சரிக்கை
திருப்பூர், : நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன், மாசுகட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனு:கோவையில் இருந்து வரும் நொய்யல் ஆற்றில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தில் ஓடும் நொய்யலாற்றின் இரு பக்கமும், தொழிற்சாலை கழிவுகள் அதிகளவில் வெளியேறுகின்றன. ஐகோர்ட் உத்தரவை மீறி, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.நொய்யல் ஆற்றை மட்டுமே மையமாக வைத்து ஆற்றின் இருபுறமும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.தொழில் வளர்ச்சி என்ற பெயரில் அதிகாரி களின் கண்டுகொள்ளாமை, அரசியல் நெருக்கடி, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார வரம்பு மீறுதல் போன்ற காரணங்களால், நொய்யல் ஆறு பாழ்பட்டு கிடக்கிறது. உரிய ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நொய்யல் ஆறு மாசுபடுவது குறித்து, ஒவ்வொரு மாதமும், கலெக்டர் தலைமையில் நடக்கும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மற்றும் சுற்றுச்சூழல் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறோம்; நடவடிக்கை இல்லை. நொய்யல் ஆறு மாசுபட்டு கிடப்பதால் புற்றுநோய் பரவி, மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்; கால்நடை உள்ளிட்ட விலங்கினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என, மருத்துவ துறை சார்ந்த என்.ஐ.டி., கள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டால், நொய்யல் படுகையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.