600 நாள் கடந்த விவசாயிகள் போராட்டம்! தீர்வு காண்பதில் நீடிக்கும் மர்மம்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே காவுத்தம்பாளையம் ஊராட்சியில், குமரிக்கல்பாளையம் கிராமம் உள்ளது. கடந்த இரு ஆண்டுக்கு முன், இப்பகுதியில், 150 ஏக்கர் பரப்பளவில் துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் முடிவெடுத்தது. அவ்விடத்தில், முன்னோர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. பிரம்மாண்ட நடுகல், முதுமக்கள் தாழி, பானை, எலும்பு துண்டுகள் என, பல்வேறு அடையாளங்கள் உள்ளன.எனவே, 'அங்கு துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றிடத்தில் அமைக்க வேண்டும். அதனை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தி, தொல்லியல் அடையாளமாக அறிவிக்க வேண்டும்' என, அங்குள்ள விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை அலுவலர்கள் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, தொல்லியல் எச்சங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.இதற்கிடையில், கடந்தாண்டு மார்ச் மாதம், மின்வாரியம் சார்பில், ஊத்துக்குளி ஊராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்ட விளக்க கடிதத்தில், 'துணை மின் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடத்தில், தொல்லியல் எச்சங்கள், கல்வெட்டுகள் மற்றும் பானை ஓடுகள் இருந்ததற்கான அடையாளம் இல்லை என, வருவாய்த் துறை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் குறிப்பிட்டுள்ள குமரிக்கல் பகுதி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் அமைக்கப்படவுள்ள துணை மின் நிலையத்துக்கு கிழக்கே, 221 மீ., தெற்கே, 208 மீ,, தொலைவில் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களில் மின் வினியோக திறனை மேம்படுத்த, தகுந்த இடமாக காவுத்தம்பாளையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,' என கூறப்பட்டிருந்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த விவசாயிகள், தொடர் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினம், 20 முதல், 25 விவசாயிகள், காலை முதல், மாலை வரை காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த முருகசாமி கூறுகையில், ''எந்தவொரு பிரச்னையை முன்னிறுத்தி நடத்தப்படும் போரட்டங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, எங்கள் கோரிக்கை தொடர்பாக, நேற்றுடன், 611 நாட்களாக எங்களின் போராட்டத்தை நடத்தியும், அரசின் கவனம் திரும்பாதது, வருத்தமளிக்கிறது. காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. தொல்லியல் சார்ந்த பணிகளும் துவங்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்'' என்றார்.