விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்; தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு
உடுமலை; ராமகுளத்தில் கிராவல் மண் அள்ளிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறையினர் உறுதி அளித்ததால், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் அருகே, 118 ஏக்கர் பரப்பளவில், ராமகுளம் அமைந்துள்ளது. குளத்தின் வாயிலாக, நேரடியாக, 1,388 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்குளத்தில் உள்ள நீர் இருப்பை ஆதாரமாக கொண்டு, குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன், குளத்தில், முறையான அனுமதியின்றி கிராவல் மண் அள்ளப்படுவதை கண்டித்து, வாகனங்களும் சிறை பிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'மண் அள்ளிய வாகனங்கள் மீது வருவாய்த்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்,' என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை தாலுகா அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தை துவக்கிய சங்க நிர்வாகிகளிடம் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராமகுளத்தில், மண் அள்ளிய வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, திருப்பூர் கலெக்டர் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும், என, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிட்டப்பட்டது. போராட்டத்தால், மடத்துக்குளம் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.