மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல் 3 வாகனங்கள் பறிமுதல்
31-Aug-2025
உடுமலை: உடுமலை அருகே, சட்ட விரோதமாக குளத்தில் கிராவல் மண் அள்ளி கடத்தப்படுவதால், பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மடத்துக்குளம் தாலுகா, குமரலிங்கம் அருகே, 118 ஏக்கர் பரப்பளவில் ராமகுளம் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் வாயிலாக, நேரடியாக, 1,388 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதோடு, சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு, நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது. இக்குளத்தில் தற்போது நீர் இருப்பு உள்ளதோடு, குறுவை நெல் சாகுபடியும் பாசன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்குளத்தின் ஒரு பகுதியில், உரிய அனுமதியின்றி, பெரிய அளவிலான, 4 அகழ்வு இயந்திரங்கள் மற்றும், 30க்கும் மேற்பட்ட லாரிகள் வாயிலாக கடந்த சில நாட்களாக கிராவல் மண் அள்ளப்பட்டு, தாராபுரம், தளவாய் பட்டணம் பகுதியிலுள்ள, செங்கல் சூளைகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கடத்தப்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான லோடு கிராவல் மண் கடத்தப்படும் நிலையில், கனிம வளக்கொள்ளையால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள் கூறியதாவது : ராமகுளம் குளம் பல ஆண்டுகளாக துார்வாரி, மழை நீர் சேமிக்கும் வகையில் குடி மராமத்து திட்டத்தின் கீழ், வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு பல ஆண்டுகளாக மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், கனிம வளக்கொள்ளையடிக்கும் நபர்கள், நீர் வளத்துறை, கனிம வளத்துறை, மாவட்ட நிர்வாகம் என எந்த அனுமதியும் பெறாமல், வேறு தாலுகா போலி ஆவணங்களை கொண்டு, நுாற்றுக்கணக்கான லோடு கிராவல் மண் எடுத்து, வணிக ரீதியாக விற்பனை செய்து வருகின்றனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே, அரசுக்கு சொந்தமான குளத்தில் கனிம வளக்கொள்ளையை தடுக்கவும், கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
31-Aug-2025