கொப்பரை ஏலம் நடத்துங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை; தென்னை சாகுபடி பரப்பு அதிகமுள்ள குடிமங்கலம் வட்டாரத்தில், கொப்பரை ஏலம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குடிமங்கலம் வட்டாரத்தில், 14,850 ெஹக்டேர் பரப்பளவில், தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. கொப்பரை உற்பத்திக்கான உலர்களங்களும் அதிகளவு உள்ளன. விவசாயிகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கொப்பரை உற்பத்தி செய்து விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. தேங்காய் உற்பத்தி அதிகமுள்ள இப்பகுதியில், விற்பனை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நடைபெற்று வந்தது. அதிகாரிகள் முன்னிலையில், ஏலம் விடப்பட்டு, விவசாயிகள், வியாபாரிகள் என இருதரப்பினரும் பயன்பெற்று வந்தனர். தற்போது எவ்வித ஏலமும் நடப்பதில்லை. அதிக சாகுபடி பரப்பு உள்ளதால், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், தென்னை வணிக வளாகம் என்ற திட்டத்தில், குடோன்கள் மற்றும் இதர வசதிகள் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஏற்படுத்தப்பட்டது. அந்த கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலும் காட்சிப்பொருளாக மாறி விட்டன. பிற ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், வாரந்தோறும் கொப்பரை, தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. அதே போல், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலும், கொப்பரை ஏலம் நடத்த, திருப்பூர் மாவட்ட விற்பனை குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இந்த வட்டார விவசாயிகளுக்கு, தேங்காய் மற்றும் கொப்பரை விற்பனைக்கான எவ்வித வசதிகளும் இல்லை. பிரச்னைக்கு தீர்வாக, தென்னை வணிக வளாக கட்டமைப்புகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.