அவிநாசியை தவிர்த்த பஸ்களுக்கு அபராதம்
அவிநாசி; அவிநாசியை 'தவிர்த்த' தனியார் பஸ்களுக்கு அபராத விதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவிநாசி உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கோவை, ஈரோடு, கோபி, சத்தி, கர்நாடக மைசூர், பெங்களூரு, கேரளா என பல இடங்களுக்குச் செல்வதற்காக வரும் பஸ்கள், அவிநாசிக்குள் வந்து செல்கின்றன. சில ஆண்டுகளாக, அரசு மற்றும் தனியார் பஸ்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு வராமல் சேலம் - கொச்சி பைபாஸ் சாலை வழியாக, ஈரோடு, கோவைக்கு செல்கிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரு தினங்கள் முன்பு அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோவையில் இருந்து வந்த தனியார் பஸ்கள், திருப்பூர் ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு சென்றன. இதை ஒருவர் வீடியோ எடுத்து அவிநாசி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவிநாசி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் குமரன் சேலம்- கொச்சி பைபாஸ் ரோட்டில், அவிநாசி - திருப்பூர் ரோட்டில் ஆய்வு செய்தார். திருப்பூரில் இருந்து கோவை செல்லும் இரு தனியார் பஸ்கள், அவிநாசி புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் கோவையை நோக்கிச் செல்வதற்காக பைபாஸ் ரோட்டில் திரும்பின. அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அவிநாசி வட்டார மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் குமரன் அவிநாசி வழியாக செல்லாத இரு தனியார் பஸ்களுக்கு, அபராத விதிப்பு நோட்டீஸ் வழங்கினார். இந்த நடவடிக்கை தொடர வேண்டும் என்கின்றனர் பயணிகள். ---- அவிநாசிக்குள் செல்லாமல் தவிர்த்த தனியார் பஸ்களுக்கு அவிநாசி வட்டார மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் குமரன் அபராத விதிப்பு நோட்டீஸ் வழங்கினார். உண்ணாவிரதம் இருக்க திட்டம் தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளையில் அவிநாசி நகருக்குள் வராமல் செல்லும் பஸ்களை கண்காணித்து அபராதம் விதிப்பதுடன் பஸ்சை பறிமுதல் செய்யவும் வேண்டும்; அபராத தொகையும் கூடுதலாக இருக்க வேண்டும். கடும் நடவடிக்கை எடுத்தால்தான், அவிநாசி புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வந்து செல்லும். அவிநாசிக்குள் வராமல் செல்லும் டிரைவர் மற்றும் நடத்துனர் மீதும் நடவடிக்கை தேவை.அவிநாசிக்குள் பஸ்கள் வந்து செல்லாமல் இருப்பது தொடர்ந்தால், அவிநாசி வட்டார மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் மற்றும் அரசு போக்குவரத்து கழக துறையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும - ரவிக்குமார், தலைவர், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை.