இன்று முதல் பரிசு தொகுப்பு வழங்கல்.. ரேஷன் கடைகளுக்கு கரும்பு வந்தாச்சு! பாதுகாப்பு நடவடிக்கை குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வு
திருப்பூர்; பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகிய பொங்கல் பரிசு பொருள் வழங்கல், அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 7.99 லட்சம் கார்டுதாரர்கள், பரிசு தொகுப்பு பெறுகின்றனர்.வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரேஷனில் அரிசி பெறும் அனைத்து கார்டுதாரர்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி; ஒருகிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.மாவட்டம் தோறும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து அரிசி கார்டுகள், போலீஸ் கார்டு, ஓ.ஏ.பி., கார்டு, இலங்கை தமிழர் கார்டு என, மொத்தம், 7 லட்சத்து 99 ஆயிரத்து 180 கார்டுகளுக்கு, நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.ரேஷன் பணியாளர்கள் மூலம், பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் விவரங்களை குறிப்பிட்டு, கடந்த 3 ம் தேதி முதல் பயனாளி கார்டுதாரர்களுக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டது. நேற்றோடு டோக்கன் வழங்கும் பணிகள் நிறைவடைந்தன.பொங்கல் பரிசு தொகுப்புக்காக, தலா 800 டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து தேவையான எண்ணிக்கையில் கரும்பு கொள்முதல் செய்து கொண்டுவரப்பட்டுள்ளது. பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை, நேற்று முதல், ரேஷன் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அரசு அறிவித்தபடி, மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இன்று முதல் துவங்குகிறது. கார்டுதாரர்கள், 'டோக்கனில்' குறிப்பிட்டுள்ள நாளில் சென்று, பி.ஓ.எஸ்., மெஷினில் கைரேகை பதிவு செய்து, பரிசு தொகுப்பு பெறலாம்.