உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இரவில் கோவிலை சூழ்ந்த வெள்ளம் :திருமூர்த்திமலையில் பரபரப்பு

இரவில் கோவிலை சூழ்ந்த வெள்ளம் :திருமூர்த்திமலையில் பரபரப்பு

உடுமலை: திருமூர்த்திமலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு கோவிலை சூழ்ந்து பல அடிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது; நேற்று வெள்ளம் வடிந்ததால், கோவிலில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உடுமலை அருகே திருமூர்த்திமலையில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நள்ளிரவு வரை தொடர்ந்தது. அப்போது, பஞ்சலிங்க அருவி மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளம், அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. கண்காணிப்பில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முருகன் சன்னிதி அருகே, நின்று கொண்டிருந்த இரவு காவலர் செல்லமுத்து, அங்கிருந்து மேடான பகுதிக்கு வர முடியாமல், சிக்கி கொண்டார். வெள்ளம் வடிந்ததும், அவர் பத்திரமாக அங்கிருந்து மீட்கப்பட்டார். திடீர் காட்டாற்று வெள்ளம் பல அடி உயரத்துக்கு, கரைபுரண்டு ஓடியதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. கன்னிமார் கோவில் சேதமடைந்தது. நேற்று காலை வெள்ளம் வடிந்ததால், கோவிலில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பரித்து வந்த வெள்ளம், கோவில் அருகேயுள்ள, மலைவாழ் மக்களின் கடைகளை அடித்துச்சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !