காட்டுப்பன்றியை சுடும் உத்தரவு; வனத்துறையினருக்கு பயிற்சி!
திருப்பூர்; விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பு தொடர்பாக, வனத்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.காட்டுப்பன்றி, மயில், மான் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை துவம்சம் செய்கிறது. இதனால், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்ற தொடர் குற்றச்சாட்டை தொடர்ந்து, காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 'காப்புக்காட்டில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவு வரையுள்ள பகுதியில் தென்படும் காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை.'காப்புக்காட்டில் இருந்து, 3 கி.மீ., தொலை விற்கு மேல் உள்ள பகுதியில் நடமாடும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுட அனுமதிக்கலாம்' என, அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளை யார் சுடுவது, எப்போதில் இருந்து, இத்திட்டத்தை அமல்படுத்துவது என்பது போன்ற வழிகாட்டுதல் வராததால், விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.வேளாண் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு, வனத்துறையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், திருப்பூரில் உள்ள வனத்துறையினருக்கு, கோவை வன உயிரியல் ஆய்வு மையத்தில் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.