திட்டத்தில் மறக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்; பாதிக்கும் தொழிலாளர்கள்
உடுமலை; தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணித்தளத்தில், குடிநீர் வசதி மற்றும் முதலுதவி பெட்டி வைத்திருத்தல் உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படாததால், தொழிலாளர்கள் தொடர்ந்து பாதித்து வருகின்றனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தற்போது மழை நீர் ஓடைகளை துார்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கிராமத்தில் இருந்து வெகுதொலையில் அமைந்துள்ள இடங்கள், பணித்தளமாக தேர்வு செய்யப்பட்டு, தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இந்நிலையில், அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால், முதியவர்கள் மற்றும் பெண்கள் மயக்கமடைவது உள்ளிட்ட உடல் நலக்குறைவுக்கு ஆளாகின்றனர். விஷக்கடி உள்ளிட்ட பாதிப்புகளின் போதும், முதலுதவி செய்ய எவ்வித வசதியும் பணித்தளத்தில் இருப்பதில்லை.இதனால், அவசர சிகிச்சைக்கு வாகனங்களை வரவழைத்து, அருகிலுள்ள கிராமத்துக்கும், மருத்துவமனைக்கும் அழைத்துச்செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்னையால், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, பணித்தளத்தில், குடிநீர் வசதி, முதலுதவிக்கான வசதிகளை ஏற்படுத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறை சிறிது காலம் மட்டுமே பின்பற்றப்பட்டது.தற்போது எந்த பணித்தளத்திலும் இந்த நடைமுறை இல்லை. இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பணித்தளத்தில், திட்ட வழிகாட்டுதல்படி, தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.பணித்தள பொறுப்பாளர்கள் வாயிலாக, முதலுதவி சிகிச்சை உடனடியாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.