உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச உடல் நல பரிசோதனை முகாம்; விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத்துறை

இலவச உடல் நல பரிசோதனை முகாம்; விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத்துறை

உடுமலை; 'உங்களின் நலமே உங்கள் குடும்பத்தின் வளம்' என்ற தலைப்பில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இலவச பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. கிராமப்புற சுகாதார செவிலியர்கள், வீடு வீடாக சென்று, உடல்நல பரிசோதனை கையேட்டை வழங்கி, வீட்டில் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனித்தனியே கையேடு வழங்கி வருகின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே, வருமுன் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால், இப்பாதிப்புகளில் இருந்து தப்பலாம் என்கிறது சுகாதாரத்துறை. தமிழகத்தில், 10 பெண்களில் ஒரு பெண், தன் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது உங்களின் அடிப்படை உரிமை என்று சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நவீன காலகட்டத்தில், மருத்துவ அறிவியல் வளர்ச்சியால், மார்பகம், கருப்பை வாய், வாய் புற்றுநோய் ஆரம்பநிலையில் கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்த முடியும். எதிர்காலத்தில் நோய் முற்றி, கடும் சிரமத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதற்கான பரிசோதனை செய்யாமல் இருப்பது, தற்காலிக தீர்வாக இருக்கும். உரிய கால இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து சுகாதாரத்துறை சிறப்பு திட்டம் தயாரித்து, வீடு வீடாக சென்று, உடல் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி வருகிறது. அதாவது, 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும், மார்பக புற்றுநோய் பரிசோதனையும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, வாய் புற்று நோய் பரிசோதனை, ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. உடல்நல பரிசோதனை வலியற்ற, உடனடியாக முடிவுகளை கண்டறியலாம்; சுகாதாரத்துறை சார்பில் இலவசமாக முகாம் நடத்தப்படுகிறது. பெண்களுக்கு, பெண் மருத்துவ குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அருமையான வாய்ப்பு சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'பயனாளிகளின் முழு விபரத்தையும் பெற்று, ரத்த அழுத்தம், சர்க்கரை, கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய்க்கு இலவச பரிசோதனை நடத்தப்படுகிறது. நோய் சாத்தியக்கூறு, கூடுதல் கவனம் தேவையா என்பது குறித்தும், பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்படும். சுகாதார செவிலியர்கள், தேவையான ஆலோசனைகளை வழங்குவர். பொதுமக்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி அருகே உள்ள சுகாதார நிலையத்தில், பரிசோதனை செய்து கொள்ளலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !