உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொடி கட்டிப் பறக்கும் சூதாட்டம் நகரம், புறநகரில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்; மாமூல் பாய்வதால் நடவடிக்கை பாய்வதில்லை

கொடி கட்டிப் பறக்கும் சூதாட்டம் நகரம், புறநகரில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்; மாமூல் பாய்வதால் நடவடிக்கை பாய்வதில்லை

திருப்பூர்: திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில், சூதாட்ட கிளப்கள் பெருகி வருகின்றன. லட்சத்தில் துவங்கி கோடிக்கணக்கில் இதில் பணம் புழங்குகிறது. 'மாமூல்' மற்றும் அரசியல் பின்புலம் காரணமாக, இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.திருப்பூர், அவிநாசி ரோட்டில் செயல்பட்டு வரும் ஒரு 'கிளப்'பில் பணம் வைத்து, முக்கிய புள்ளிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சீட்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரலானது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவில் பேரில், போலீசார் நேற்றுமுன்தினம் அங்கு சோதனை நடத்தினர். அங்கு வருவோர், பணம் செலுத்தி குறிப்பிட்ட கலர்களில், நம்பர் குறிப்பிடப்பட்ட டோக்கன்களை பெற்று சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதுதொடர்பாக கிளப் மேலாளர் ராமநாதன் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து, 3.29 லட்சம் ரூபாய் மற்றும் ஏராளமான டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து, 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.விடிய விடிய சூதாட்டம்திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், செயல்படும் சட்ட விரோத பார்கள்; பொழுதுபோக்கு என்ற பெயரில் செயல்படும் சில கிளப்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களில், சத்தம் இல்லாமல் சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு மது விற்பனையும் படுஜோராக நடக்கிறது. சூதாட்டத்தில் தினமும், லட்சக்கணக்கான ரூபாய் புழங்கி வருகிறது. விடுமுறை நாட்களில் இந்த தொகை கோடிக்கு மேல் சென்று விடுகிறது. இங்கு விடிய விடிய சூதாட்டம் நடைபெறுகிறது.'ரெய்டு' பயம் இல்லைஇதற்கு போலீசில் துவங்கி, ஆளும்கட்சி பிரமுகர்கள் வரை பலருக்கும், மாதம்தோறும் 'கப்பம்' கட்டப்படுகிறது. இதனால், ரெய்டு பயம் இன்றி துணிச்சலாக இத்தகைய கிளப்கள் செயல்படுகின்றன. காங்கயம், தாராபுரம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் பண்ணை வீடு, கிளப் போன்றவற்றிலும் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கிறது.மாநகரம் மற்றும் புறநகரில், சமீப காலமாக போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தாலும், 'கிளப்'களில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தலைதுாக்கி வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

கண் துடைப்புக்காக 'ரெய்டு'

ஒவ்வொரு 'கிளப்' களின் பின்னணியில், ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள், குற்றப்பின்னணியில் கொண்ட நபர்கள் உள்ளனர். இவர்களுடன் போலீசார் இணக்கமாக சென்று வருகின்றனர். கிளப்களில் இருந்து மாதந்தோறும், தலை முதல் அடி வரை என, அனைவருக்கும் 'லகரங்'களில் சென்று வருகிறது. ஆளும்கட்சி பிரமுகர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதால், இதை உளவு பார்த்து தலைமைக்கு சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டிய, அனைத்து உளவு பிரிவு போலீசாரும் 'மவுனம்' காத்து வருகின்றனர். அவ்வப்போது, கண்துடைப்புக்காக 'ரெய்டு' நடக்கிறது. பின், சில நாட்கள் நடத்தாமல் விட்டு பின் மீண்டும் ஆரம்பிக்கின்றனர். போலீஸ் 'டீம்' செல்வதை அறிந்து, ஸ்டேஷனில் இருக்க கூடிய, சில கருப்பு ஆடுகள் தகவல் கொடுத்து விடுகின்றனர். இவ்விஷயத்தில், மாநகரில் கமிஷனரும், புறநகரில் எஸ்.பி.,யும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கிளப்கள் கண்காணிக்க உத்தரவு

ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதியில் சட்டவிரோதமாக கிளப் செயல்படுகிறதா, அனுமதி பெற்று நடந்தாலும், அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடக்கிறதா என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும். ஸ்டேஷன் பகுதியில் எத்தனை கிளப் செயல்படுகிறது போன்ற விபரங்களை போலீசார் கணக்கெடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை