காந்தி நகர் சிக்னல் மூடல்; போக்குவரத்து எளிதானது
திருப்பூர்: திருப்பூர் நகரில், பிரதான ரோடுகளில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் காரணமாக பல இடங்களிலும், நெருக்கடி மற்றும் தாமதம் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக மாற்று வழி குறித்து ேபாலீசார் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். முதல் கட்டமாக புஷ்பா சந்திப்பு பகுதியில் செயல்பட்ட போக்குவரத்து சிக்னல் மூடப்பட்டு சோதனை அடிப்படையில் மாற்று வழி ஏற்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் நல்ல வகையில் கை கொடுத்தது. 'நோ சிக்னல்' - 'பிரீ டிராபிக்' திட்டம் வெற்றிகரமாக மாறியது. இந்த இடத்தில் வாகனங்கள் தேவையற்ற வகையில் காத்திருக்காமல் கடந்து செல்லத் துவங்கின. இத்திட்டம் வெற்றிகரமாக மாறியதால், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி. சிக்னலிலும் இந்த நடைமுறையை போலீசார் கடந்த இரு மாதம் முன் மேற்கொண்டனர். சிக்னல் மூடப்பட்டு இரு பகுதிகளில், 'யு டர்ன்' நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. வாகன ஓட்டிகள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, அவிநாசி ரோடு, காந்தி நகர் சிக்னல் பகுதியிலும் நோ சிக்னல் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இரு இடங்களில் 'யு டர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வாகன போக்குவரத்து எளிதாகி உள்ளது.