மலை போல் குப்பைகள் வீடுகளில் கருப்புக்கொடி
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 44, 45, 50 ஆகிய வார்டு பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது; குப்பைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். தீர்வு காண நடவடிக்கை எடுக்காத வார்டு கவுன்சிலர்கள், மேயர், எம்.எல்.ஏ. ஆகியோரைக் கண்டித்து நேற்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெரிய தோட்டம், கோம்பைத் தோட்டம், சத்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நேற்று கருப்புக்கொடி கட்டியும், காயிதே மில்லத் நகர் பள்ளி வாசல் அருகே, குப்பை குவிந்து கிடக்கும் இடத்தில் மக்கள் திரண்டு கருப்புக்கொடி காட்டியும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.