குப்பை தரம் பிரிப்பு; பொறுப்பு அவசியம்
திருப்பூர்: ''குப்பை தரம் பிரித்து சேகரிப்பதில் பொறுப்புணர்வு அவசியம்'' என்று நகர் நல அலுவலர் முருகானந்தம் வலியுறுத்தினார். திருப்பூர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 'குப்பை அகற்றும்போது மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை பணி' குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் சாந்தி தலைமை வகித்தார். மருத்துவமனையின் அனைத்து வார்டுகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகராட்சி நகர் நல அலுவலர் முருகானந்தம் பேசுகையில், ''குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். மருத்துவமனையில் ஏற்கனவே உங்களுக்கு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, குப்பைகளை தரம் பிரித்து, சேகரிக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரிப்பது பெரும் சவாலாக உள்ளதால், நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ஊருக்கே நாம் தான் பாடம் சொல்லித்தர வேண்டும்; நாமே தவறு செய்ய கூடாது; குப்பை தரம் பிரிக்க ஒவ்வொருவரிடம் நீங்கள் தான் எடுத்து சொல்ல வேண்டும்,' என்றார்.