உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதலிபாளையம் பாறைக்குழியில் 22 வரை குப்பை கொட்டக்கூடாது

முதலிபாளையம் பாறைக்குழியில் 22 வரை குப்பை கொட்டக்கூடாது

திருப்பூர்: திருப்பூரில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கொட்ட இடம் எதுவும் இல்லாததால், பாறைக்குழிகள் மட்டுமே தீர்வு என்ற நிலையில், மாநகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது. தற்போது, முதலிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டப்படுகிறது. இதற்கு, தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், சில விவசாய அமைப்பினர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் இணைந்து, திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி, குப்பை பிரச்னை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில், சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையில், 'இவ்விவகாரத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தனது விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். 'அதுவரை பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும்' எனவும் மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. அதேநேரம், வழக்கு விசாரணை, நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இடைப்பட்ட நாட்களில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினரும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் வேலுசாமி கூறுகையில்,''நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின்போது, வரும், 22ம் தேதி வரை முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்டக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்கும், திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்வதற்கென ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடுவாய் பகுதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்'' என்றார். குப்பை தேக்கம் சில நாட்களாக மாநகராட்சியின் ஒவ்வொரு பகுதியிலும் குப்பைகள் மலை போல் தேங்க ஆரம்பித்து விட்டது. பேப்ரிக்கேஷன் ரோடு, பூ மார்க்கெட் பின்புறம், வாலிபாளையம், லட்சுமி நகர் மெயின் ரோடு என, பல இடங்களில் கடும் துர்நாற்றத்துடன், மக்கள் நடமாட முடியாத அளவுக்கு குப்பை தேங்க ஆரம்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை