பாலிதீன் கட்டுப்படுத்தும் நடவடிக்கை: அரசுத்துறைகள் முன்னுதாரணம் காட்டலாமே!
திருப்பூர்: திருப்பூரில், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசுத்துறைகளே, மெத்தனமாக செயல்படுவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூரில், பாலிதீன் மற்றும் அதுசார்ந்த பொருட்களின் கட்டுக்கடங்காத பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. பயன்படுத்தப்பட்ட பாலிதின் கவர் உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடுக்கு அனுப்பி வைக்கும் விழிப்புணர்வை, தொழில் நிறுவனங்கள் பெற வேண்டும் என்ற அறைகூவல் வலுத்து வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை, வீடுகளில் இருந்து துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, திருப்பூர் மாநகராட்சியும் தெரிவித்திருக்கிறது. முதலில், இந்த நடவடிக்கையை வழிநடத்தி, முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு அரசுத்துறைகளுக்கு தான் உள்ளது. குறிப்பாக, மாவட்ட நிர் வாகத்தின் வழிகாட்டுதல், அறிவுறுத்தல் அடிப்படையில் தான், பாலிதீன் ஒழிப்பு நடவடிக்கையில் பிற துறையினர் ஈடுபடுவர் என்ற நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே பாலிதீன் குப்பை குவிந்து கிடக்கிறது. உலர் நிலையில் உள்ள பாலிதீன், அட்டை பெட்டி உள்ளிட்டவற்றை கையாள்வது மிக எளிது; அவற்றை, சேகரித்து சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தனியார் நிறுவனத்தினர் பலர் மேற்கொண்டு வரும் நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வீணாகும் பாலிதீன் கவர், அட்டைப் பெட்டி உள்ளிட்ட பொருட்களை தனியாக சேகரித்து, அவற்றை மறுசுழற்சி அல்லது மறுபயன்பாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்கின் றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். தடையின்றி புழக்கம் ஒரு முறை பயன் படுத்த துாக்கி வீசப்படும் பாலிதீன் பை பயன்படுத்த தடை உள்ள போதும், சிறிய பெட்டிக்கடை துவங்கி பெரிய மால் வரை தடையின்றி பயன்படுத்தப்படுகிறது. அதுவும், தள்ளுவண்டிக்கடை வியாபாரிகள் பார்வைக்கு தெரியும்படி பாலிதீன் கவர்களை வைத்து, அதில் பொருட்களை அடைத்து கொடுக்கின்றனர். எனவே, பாலிதீன் பொருட்களை பயன் படுத்துவதற்கான தடையை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற யோசனையும் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல், அறிவுறுத்தல் அடிப்படையில் தான், பாலிதீன் ஒழிப்பு நடவடிக்கையில் பிற துறையினர் ஈடுபடுவர் என்ற நிலையில், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே பாலிதீன் குப்பை குவிந்து கிடக்கிறது