தீக்காயங்களுக்கு உடனடி சிகிச்சை : தயார் நிலையில் அரசு மருத்துவமனை
திருப்பூர்: பட்டாசு, தீக்காயம் பட்டால் சிகிச்சைக்கு வருவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க தேவையான சிறப்பு வார்டு, திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு சத்தம் தற்போதே கேட்கிறது. பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கினாலும், தீ விபத்து ஏற்பட்டால், அதை எதிர்கொள்வது, அதற்குதகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவ மனை, தாலுகா மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீக்காயத்துக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு முக்கியம் மாவட்ட மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குனர் மீரா கூறுகையில், ''பல்லடம், அவிநாசி, தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட தாலுகா மருத்துவமனைகளில் ஒரு டாக்டர், நான்கு செவிலியர் அடங்கிய தீத்தடுப்பு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பத்து பேர் கொண்ட தீக்காய சிகிச்சை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீக்காயமேற்பட்டு வருவோருக்கு உடனடி சிகிச்சை வழங்குவர். மக்கள் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க வேண்டும்'' என்றார். மருந்து இருப்பு உள்ளது மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெயந்தி கூறுகையில், ''மேம்படுத்தப்பட்ட நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் தீக்காய மருந்து, மாத்திரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலைய அளவில் சிகிச்சை தேவைப்படுவோரை அங்கேயே அனுமதித்து சிகிச்சை தர வேண்டும். உயர் சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்டர், செவிலியர் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்'' என்றார்.