திருப்பூர்: மத்திய, மாநில அரசு திட்டங்களை, தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் வரை கொண்டு சேர்க்க, வழிகாட்டி கருத்தரங்கு தொடர்ந்து நடத்தப்படுமென, 'லகு உத்யோக் பாரதி' நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். லகு உத்யோக் பாரதி' சார்பில், குறு, சிறு தொழில்துறையினருக்கான வழிகாட்டி கருத்தரங்கு நேற்று முன்தினம், அவிநாசி ரோடு பவன்ஹாலில் நடந்தது. நிகழ்ச்சியில், 'லகு உத்யோக் பாரதி' செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், 'லகு உத்யோக் பாரதி' கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். துணை தலைவர் அழகிய மணவாளன், 'லீப்' திட்டம் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விவரித்தார். இ.எஸ்.ஐ., துணை இயக்குனர் கார்த்திகேயன், இ.எஸ்.ஐ., திட்டம் மற்றும் மருத்துவமனை சேவைகள், தொழில்துறையினர் பெறும் பயன்கள் குறித்தும் பேசினார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமலாக்க அலுவலர் கிருஷ்ணகுமார், 'பி.எப்., திட்டங்கள் குறித்தும், தொழிலாளர்கள் பெறும் பயன்பாடு குறித்தும் பேசினார். மாவட்ட தொழில் மைய நிர்வாகிகள்,மத்திய, மாநில அரசுகளின் மானிய கடன் திட்டங்கள் குறித்து விளக்கினர். தமிழக தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகத்தின், துணை இயக்குனர் சந்தோஷ், தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பேசினர். 'சிட்பி' வங்கியின் துணை பொதுமேலாளர் ராமச்சந்திரன், குறு, சிறு நிறுவனங்களின் மேம்பாட்டு வங்கி மூலமாக வழங்கப்படும் சேவை மற்றும் கடன் திட்டங்கள் குறித்து பேசினார். பொருளாளர் கணேசன் நன்றி கூறினார். மாவட்ட 'லகு உத்யோக் பாரதி' நிர்வாகிகள் பேசியதாவது: மத்திய, மாநில அரசு திட்டங்களையும், சேவைகளையும், தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் வரை கொண்டு சேர்க்க, 'லகு உத்யோக் பாரதி' திட்டமிட்டுள்ளது. அதற்காக, ஒவ்வொரு பகுதி வாரியான உறுப்பினர்களை அழைத்து வழிகாட்டி கருத்தரங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். முதன்முதலாக, அவிநாசி, மங்கலம் ரோடு, காலேஜ் ரோடு, பி.என்.ரோடு பகுதி உறுப்பினர் கருத்தரங்கு நடக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட 'உதயம்' பதிவு நடந்துள்ளது. குறு. சிறு நிறுவனங்கள் பதிவு செய்தாலும், தொழிலக பாதுகாப்பு துறையில், 'பேக்டரி லைசென்ஸ்' உரிமம் பெறுவது குறைவாக இருக்கிறது. திருப்பூரில், 5,000க்கும் குறைவான நிறுவனங்கள் மட்டுமே, 'பேக்டரி லைசென்ஸ்' பெற்றுள்ளன. குறு, சிறு தொழில்கள், அடுத்த தொழில் வளர்ச்சியை நோக்கி செல்ல, தொழில் வர்த்தக நடைமுறையை நெறிப் படுத்த வேண்டும். குறிப்பாக, திருப்பூர் தொழிற்சாலைகள், 'பேக்டரி லைசென்ஸ்' வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வல்லுனர்கள் மூலமாக, உதவியும் செய்யப்படும். தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், 'லகு உத்யோக் பாரதி' மூலமாக, தொடர்ந்து வழிகாட்டி கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.