உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேரன் - பேத்திகள் பார்வையாளர்கள் தாத்தா - பாட்டிகள் இளம் வீரர்கள்

பேரன் - பேத்திகள் பார்வையாளர்கள் தாத்தா - பாட்டிகள் இளம் வீரர்கள்

திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் மூத்தோர் தடகள சங்கம் சார்பில், மூத்தோர் தடகளப் போட்டி நடந்தது. வழக்கமாக, தடகளப் போட்டிகள் என்றால் உடன் பயிற்சியாளர், உடற்கல்வி ஆசிரியர், பெற்றோர் வருவர். ஆனால், மூத்தோர் போட்டி என்பதால் இங்கு பெற்றோர்கள் - தாத்தா - பாட்டி வயதினர் ஓட வந்தனர்; அதைப் பார்க்க அவரது மகன், மகள்கள், பேரன், பேத்திகள் வந்திருந்தனர்.அறுபது வயதை எட்டியவர்கள் பலரும் ஆர்வமுடன் போட்டிக்கு வந்திருந்தனர். குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டியில் அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 100 மீ., ஓட்டத்தில் சேலையை மடித்து, இடுப்பில் செருகிய படி, 50 வயது பெண் ஒருவர் ஓட, ' அக்கா சூப்பருங்க ' என விசில் அடித்து சக வீராங்கனைகள் உற்சாகப்படுத்தினர். 75 வயதை கடந்த ஒருவர் போட்டியில் பங்கேற்க வந்த போது, அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் நீளம் தாண்டி அசத்திய போது, அருகில் இருந்தவர், 'உங்களுக்கு 50 ஆயிருச்சா' எனக் கேட்டார். 'ஆமாம் சார்... இன்னும் ஒரு பத்து வருஷம் விளையாடலாம். அப்புறம் உடம்பு இடம் கொடுத்தா சரி' என்றார் தெம்புடன்.65 வயது நபர் ஒருவர், நீளம் தாண்டுதலில் அசத்தி, ஒரு குட்டிக்கரணம் அடித்து காட்ட பலத்த ஆரவாரம். இவர் 100 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் சர்வசாதாரணமாக துள்ளி குதித்து தாண்ட, ஆரவாரம் ஓய சில நிமிடங்களானது. விசேஷங்களில் மூத்தோர் சந்தித்தால் 'உங்களுக்கு சுகர் எவ்வளவு? பிரஷர் மாத்திரை சாப்பிட்டுத்தானே இருக்கீங்க... இன்சுலின் போடற மாதிரி ஆயிருச்சா' என்றுதான் பேசிக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் இங்கோ, 'இன்னமும் ஓடிக்கிட்டே இருக்கீங்க... எங்க வயித்தையே காணோம்' என்று மெச்சத்தக்க வார்த்தைகள் வெளிப்பட்டன.'காலையில் வாக்கிங், ஜாக்கிங் முடித்தால் தான் உடம்பு வெடுக்குனு இருக்கு' என்று மூத்தோர் சிலர் உற்சாகம் குன்றாமல் கூறினர்.

குறைந்தளவே பங்கேற்ற

30 - 40 வயது பிரிவினர்------15 ஆண்டுகளுக்கு மேலாக போட்டி நடத்துகிறோம். அன்று, 40 முதல், 50 வயது பிரிவில் பங்கேற்றவர்கள் இன்றும், 45 முதல் 55 வயது, 60 முதல், 65 வயது அதற்கு மேற்பட்ட பிரிவில் பங்கேற்கின்றனர். ஆனால், 30 முதல் 35 மற்றும் 35 முதல் 40 வயது வரையிலான பிரிவில் தான் தடகள போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் குறைவாக உள்ளனர். பல்வேறு பணிச்சூழல், போதிய ஓய்வின்மை, துாக்கம் குறைவு, மன அழுத்தம் காரணமாக இன்றைய இளைஞர்கள் பலர் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதில்லை.வாரம் ஒருமுறை மைதானம் வருவதே அரிதாகி விட்டது. இதே நிலை தொடரக்கூடாது. குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நம் ஓட்டம் ஒருபுறம் இருந்தாலும், உடல் நலனிலும் அக்கறை செலுத்தினால், தான் நோயின்றி நீண்ட நாட்களுக்கு வாழ முடியும்.- போட்டி ஏற்பட்டாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை