உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பசுமையான மரங்களுக்கு பாதிப்பு; நடவடிக்கை எடுப்பது எப்போது?

பசுமையான மரங்களுக்கு பாதிப்பு; நடவடிக்கை எடுப்பது எப்போது?

உடுமலை; நெடுஞ்சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் மரங்களில், ஆணியடித்து, விளம்பர அட்டைகளை தொங்க விடுவதால், மரங்கள் பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோரங்களில், ஆயிரக்கணக்கான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.சுற்றுச்சூழலுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் உதவியாக இம்மரங்கள் இருந்து வருகின்றன.இந்நிலையில், சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும் மரங்களை செயற்கையாக காய வைத்து சிலர் வெட்டி வருகின்றனர்.மேலும், விளம்பரத்திற்காக, பசுமையாக உள்ள மரங்களில், ஆணி உட்பட பொருட்களை அடித்து அதில் விளம்பர அட்டைகளை தொங்க விடுவது அதிகரித்துள்ளது.குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையான பொள்ளாச்சி ரோடு மற்றும் மாநில நெடுஞ்சாலைகளான, உடுமலை - தாராபுரம், மாவட்ட முக்கிய ரோடுகளான திருமூர்த்தி, அமராவதி உட்பட ரோடுகளில், பராமரிக்கப்பட்டு வரும் மரங்களில் விளம்பர அட்டைகள் அதிகளவு ஆணியடித்து தொங்க விடப்படுகின்றன.இதனால், மரங்களின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், நோய்த்தாக்குதல் ஏற்பட்டு மரங்கள் கருகும் அபாயமும் உள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி, விளம்பர அட்டைகளை தொங்க விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !