உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரைமட்டமாகும் வாரிய குடியிருப்பு மாற்றுத்திட்டம் தேவை

தரைமட்டமாகும் வாரிய குடியிருப்பு மாற்றுத்திட்டம் தேவை

உடுமலை; பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல், தரைமட்டமாகி சமூக விரோதிகள் மையமாக மாறியுள்ள, மருள்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை அப்புறப்படுத்தி, புதிய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை அருகே மருள்பட்டியில், 1994ம் ஆண்டில், வீட்டு வசதி வாரியத்தால், 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட அப்போதைய அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அறிவிப்பு வெளியானது.அப்பகுதியில், களிமண் பரப்பாக இருப்பதால், வீடுகள் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 300 வீடுகள் கட்டும் பணி வீட்டு வசதி வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஏ,பி,சி, என மூன்று பிரிவுகளில் வீடுகளும், அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.போதிய பஸ் வசதி இல்லாதது உட்பட பல்வேறு காரணங்களால், வீடுகளை ஏலம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் இதர தரப்பினர் முன்வரவில்லை.இதனால், 300 வீடுகளும் காட்சிப்பொருளாக மாறி, 20 ஏக்கரில், அமைந்த குடியிருப்பு வளாகம் முழுவதும் புதர் மண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த, 2012ல் மீண்டும், 168 வீடுகளை ஏலம் விட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், யாரும் ஆர்வம் காட்டவில்லை.இதனால், வீடுகளில் இருந்த இரும்பு ஜன்னல்கள், தொட்டி உட்பட பல்வேறு பொருட்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மாயமானது. தற்போது, பெரும்பாலான வீடுகள் இடிந்து, மேற்கூரையில், கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரிகிறது.குடியிருப்புக்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் பயன்பாடு இல்லாமல் பாழாகி விட்டன. சில வீடுகளின் சுவர்களை இடித்து, செங்கற்கள் கூட திருடப்பட்டுள்ளன.புதர் மண்டி பரிதாப நிலையில் காணப்படும் இக்குடியிருப்பு, தற்போது சமூக விரோத செயல்களுக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது.எனவே, பயன்பாடு இல்லாமல், தரைமட்டமாகி வரும் வீடுகளை அப்புறப்படுத்தி விட்டு, புதிய திட்டத்தை வீட்டு வசதி வாரியத்தினர் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ