சொட்டுநீர் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி!
உடுமலை; சொட்டு நீர் பாசனத்தில், நிலக்கடலை சாகுபடி செய்ய உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை ஆண்டியூர், தேவனுார்புதுார், செல்லப்பம்பாளையம், பாப்பனுாத்து, ராவணாபுரம், உடுக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், முன் நிலக்கடலை சாகுபடி பிரதானமாக இருந்தது. குறிப்பாக, மணல் கலந்த செம்மண் நிலப்பரப்பில், இச்சாகுபடி அதிகமாக மேற்கொள்ளப்பட்டது.பருவமழை சீசனில், மானவாரியாகவும், பி.ஏ.பி., பாசனத்துக்கும், பல ஆயிரம் ஏக்கரில், இச்சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது. சராசரியாக ெஹக்டேருக்கு, 1,300 கிலோ வரை விளைச்சல் இருந்தது. பின்னர், நிலையான விலை கிடைக்காதது, பருவநிலை மாற்றத்தால் விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால், படிப்படியாக சாகுபடி பரப்பு குறைந்தது.மேலும், மலையடிவார கிராமங்களில், அறுவடை தருணத்தில், காட்டுப்பன்றிகளால், அதிக சேதம் ஏற்பட்டது. தொடர் பாதிப்பு காரணமாக, இச்சாகுபடியை விவசாயிகள் கைவிட துவங்கினர். இந்நிலையில், சில ஆண்டுகளாக, எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, நிலக்கடலை தேவை அதிகரித்தது; விலையும் உயர்ந்தது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு பிற வட்டாரங்களில் இருந்து கொள்முதலுக்காக வியாபாரிகளும் வரத்துவங்கினர். இதையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு, தற்போது, நிலக்கடலை சாகுபடி செய்ய, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.குறிப்பாக, சொட்டு நீர் பாசன தொழில்நுட்பத்தை பின்பற்றி, நிலக்கடலை விதைத்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தால், களைகளும் அதிகம் முளைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.