ஜி.எஸ்.டி., வரி குறைப்பு; ஓட்டல்கள் சங்கம் வரவேற்பு
அவிநாசி; அவிநாசி அருகே மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுக் குழு, அவிநாசி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திண்டுக்கல் மண்டல நிர்வாகிகள் கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மண்டல தலைவர் ராஜ்குமார், செயலாளர் நாகராஜன், திருப்பூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் கவுரவ தலைவர் மூர்த்தி, சங்க தலைவர் சாமிநாதன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் ராமு, அவிநாசி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சண்முகம், செந்தில்குமார், பூபதி, மோகன கிருஷ்ணன், மோகனசுந்தரம் உட்பட பலர் பேசினர். முப்பெரும் விழா குறித்து, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது: எஸ்டிபி பிளான்ட் அமைக்க வேண்டும் என்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். தீயணைப்புத் துறையில் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதுவும் 150 இருக்கைகளுக்கு குறைவாக உள்ள உணவகங்களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும். 24 மணி நேரமும் அனைத்து தொழில்களும், உணவகங்களும் இயங்கலாம் என்ற சட்டத்தை செயல்படுத்த வேண்டும். பேக்கரிகளுக்கு, ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளித்ததையும், சாதாரண தங்கும் விடுதிகளுக்கு, 5 சதவீதமாக குறைத்ததை வரவேற்கிறோம். அமெரிக்க அதிபர் டிரம்ப், 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், அந்நிய நிறுவனங்களின் குளிர்பானங்களை விற்பதை தவிர்த்து, நம் நாட்டில் தயாரிக்கப்படும் குடிநீர் மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்த வேண்டும் என சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து, முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.