அரசு கல்லுாரியில் சேர்க்கைக்கு வழிகாட்டி மையம்; குழப்பமில்லாமல் விண்ணப்பிக்க அறிவுரை
உடுமலை; பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையொட்டி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையொட்டி, கல்லுாரிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலைப்பிரிவில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பொள்ளாச்சி, தாராபுரம், உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்தும், மாணவர்கள் ஆர்வத்துடன் இங்கு சேர்கின்றனர்.கடந்த இரண்டாண்டுகளாக விண்ணப்பிக்கும் முறை, ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளதால், மாணவர்கள் பலரும் வீட்டிலிருந்து விண்ணப்பித்தனர்.நடப்பாண்டிலும் இதே நடைமுறை உள்ளது. இருப்பினும், ஆன்லைன் விண்ணப்பத்தில் பல்வேறு குழப்பங்கள் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. மேலும், பலருக்கும் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து, தெளிவான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.இதனால் அரசு கலைக்கல்லுாரியில், வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை, பேராசிரியர்கள் முழுமையாக விளக்கமளித்து, மாணவர்களுக்கு தெளிவு படுத்துகின்றனர்.மேலும், மொபைல் போனுடன் வந்திருக்கும் மாணவர்களுக்கு, அதன் வாயிலாக விண்ணப்பிக்கவும் உதவுகின்றனர்.நாள்தோறும், ஐம்பதுக்கும் அதிகமான மாணவர்கள் உடுமலை அரசு கலைக்கல்லுாரி வழிகாட்டி மையங்களை பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து கல்லுாரியின் வழிகாட்டி மையத்தை பயன்படுத்தி, மாணவர்கள் பயன்பெறுவதற்கு கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.