உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காப்பீடு தொகை செலுத்தப்பட்டதா? கைத்தறி நெசவாளர்கள் தவிப்பு

 காப்பீடு தொகை செலுத்தப்பட்டதா? கைத்தறி நெசவாளர்கள் தவிப்பு

பல்லடம்: காப்பீட்டு திட்டத்துக்கான பங்குத் தொகையை பல ஆண்டாக செலுத்தாமல், தற்போது நெசவாளர்களையே செலுத்துமாறு கூறுவது, சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, கைத்தறி நெசவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கோவை மண்டல பாரதீய மஸ்துார் கைத்தறி நெசவாளர் சங்கத்தின் செயலாளர் நடராஜன் கூறியதாவது: கைத்தறி நெசவாளர்களுக்கு, மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், பெரும்பாலான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதா; இல்லையா என்பதே தெரியாத நிலை உள்ளது. நெசவாளர்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டால், கைத்தறி துணி நுால் துறை அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் சரியான விளக்கம் அளிப்பதில்லை. இவ்வாறு, கடந்த, 2015ல், 'பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற காப்பீட்டு திட்டம், சில ஆண்டுகளுக்கு முன், நெசவாளர்களுக்காக கொண்டு வரப்பட்டது. இதன் கீழ், ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் கைத்தறி நெசவாளர்களுக்கான காப்பீட்டுத் தொகையில், மத்திய அரசு சார்பில், 238 ரூபாயும், மாநில அரசு சார்பில், 80 ரூபாயும் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீப காலமாக உயிரிழந்த பல கைத்தறி நெசவாளர் குடும் பங்களுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இதற்கிடையே, தற்போது, பங்கு தொகையை நெசவாளர்களே செலுத்தி, காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கைத்தறி துணி நுால் துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. எனில், இத்தனை ஆண்டுகளாக, 80 ரூபாய் பங்குத்தொகை செலுத்தப்படவில்லையா என்ற கேள்வி எழுகிறது. மேலும், குறைந்த வருவாயுடன் கைத்தறி நெசவாளர்கள் குடும்பம் நடத்தி வரும் நிலையில், எங்களையே பங்குத்தொகை செலுத்த நிர்பந்திப்பது வேதனையாக உள்ளது. எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தும் அரசால், நெசவாளர்களை பாதுகாக்க கூடிய காப்பீட்டு திட்டத்துக்கு, 80 ரூபாயை செலுத்துவது நிதிச்சுமையை ஏற்படுத்துமா? எனவே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் உள்ளன நெசவாளர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீட்டுக்கான, பங்குத் தொகையை அரசே செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ