அரசு ஆவணங்களின்றி தவித்த மலைவாழ் மக்கள்; அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு முகாம்
உடுமலை; உடுமலை அருகே, அடிப்படை வசதிகள் மற்றும் அரசு ஆவணங்களின்றி தவித்த மலைவாழ் மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகத்தில், தளிஞ்சி, தளிஞ்சி வயல், சின்னாறு, கோடந்துார் ஆகிய மலைவாழ் மக்கள் கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு, ரோடு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுரிமை, ஜாதிச்சான்று உள்ளிட்டவையும் பெற முடியாமலும், வசிக்கும் வீடு மற்றும் விவசாய நிலங்களுக்கு அனுபவ உரிமை பட்டா கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்தனர். வனத்தில் வசிக்கும் இந்த பழங்குடியினருக்கு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் தொடர்பு இல்லாத நிலையே தொடர்ந்தது. கடந்த, 4ம் தேதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே, மலைவாழ் மக்கள் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர்கள், தங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை, என வேதனை தெரிவித்தனர். இதன் அடிப்படையில், இந்த மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், அமராவதி ரோடு, ஆலாம்பாளையம் பிரிவிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தலைமை வகித்தார். வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை. தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, ஆதார் மையம், இ - சேவை மையம், பழங்குடியினர் நலத்துறை, தேர்தல் பிரிவு என அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வருவாய்த்துறை சார்பில், ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதியோர், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, வனப்பட்டா, தாட்கோ கடனுதவிகள், தொழிலாளர் நலன் மற்றும் பல்வேறுபட்ட நலவாரியங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி, உரிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆதார் மையம் சார்பில், புதிய ஆதார் அட்டை மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, இ - சேவை மையம் சார்பில், பல்வேறு அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பழங்குடியினர் நல வாரிய அட்டை பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பொது கிணறு வெட்டுதல், கறவைமாடு, ஆடு வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் பிரிவு சார்பில், வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சின்னாறு முதல் கோடந்துார் மற்றும் சின்னாறு முதல் தளிஞ்சி, தளிஞ்சி வயல் வரை, ரோடு மற்றும் கூட்டாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும், என அம்மக்கள் மனு அளித்துள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மலைவாழ் மக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனடியாக நிறைவேற்றவும், மீதம் உள்ள மலைவாழ் மக்களுக்கும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.