உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவிலில் தேங்கும் கழிவுநீர் ஹிந்து முன்னணி கண்டனம்

கோவிலில் தேங்கும் கழிவுநீர் ஹிந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்:'தமிழக கோவில்களில் மழை நீர், கழிவு நீர் தேங்கும் அவல நிலை உள்ளது. இதை பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் உள்ளது,' என்று ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தமிழகம் முழுதும் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான பிரதித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் மழைகாலங்களில் மழையால் ஏற்படும் வெள்ளங்களால் கோவில்கள் மிகவும் பாதிப்படைகின்றன. கோவில் உள்ள கருவறை வரை, மழை நீர் தேங்கி நிற்பது வேதனைக்குரியதாகும். சில நாள் முன், சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கர நாராயணர் கோவிலில் மழை நீர் தேங்கியதால், பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அதேபோல், தஞ்சாவூரில் உள்ள சக்கராபள்ளி சக்கரவாகீஸ்வரர் கோவில் கருவறைக்குள் தண்ணீர் தேங்கியிருப்பதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், ஒரு மணி நேர மழைக்கே, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி மழை நீர் தேங்கி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் உள்ளது. சில நாள் முன், திருச்செந்துார் முருகன் கோவிலில் கழிவுநீர் தேங்கி கிடந்தது. பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் இத்தகைய அவ ல நிலையால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை அரசு துறை உணரவில்லை. தமிழக பொதுப்பணித்துறையின் மெத்தன போக்கே காரணம். கோவில் பகுதியில் ரோடு அமைக்கும் போது, ஏற்கனவே போடப்பட்ட ரோடு மீதே, பொதுப்பணி துறையினர் மேம்போக்காக சாலை போடுகின்றனர். இதனால், ரோட்டின் உயரம் அதிகமாகி, கோவில் பள்ளத்தில் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகிறது. மழைகாலங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கோவிலுக்கு உள்ளே வந்து, கோவில் கருவறை வரை தேங்கி நிற்கின்ற அவலம், தமிழகத்தில் தொடர்ந்து நடக்கிறது. தற்போது, பல கோவில்களும் கோவில், குளங்களும் ஆக்கிரமிப்பில் உள்ள காரணத்தாலும் கோவில்களில் பெய்யும் மழை நீர் வெளியேற முடியாமல் கோவில்களுக்கு உள்ளே தேங்கி நிற்கிறது. கோவில்களின் புனிதத்தை காக்க, குளங்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி