காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தோட்டக்கலை பயிர் சாகுபடி
திருப்பூர்: காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி நடந்தது. தோட்டக்கலை மலை பயிர்கள் துறை மற்றும் மாவட்டம் காலநிலை மாற்ற இயக்கம் திருப்பூர் ஆகியோர் சார்பில், விவசாயிகளுக்கு காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி இடுவாயில் மாநகராட்சி அறிவியல் பூங்காவில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், திருப்பூர், பல்லடம், ஊத்துக்குளி மற்றும் அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் புனிதவேணி அனைவரையும் வரவேற்றார். காலநிலை மாற்றம், அதற்கேற்ற தோட்டக்கலை பயிர்களில் பூச்சிகள் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை பேராசிரியர் கண்ணன் விரிவாக எடுத்துரைத்தார். பொங்கலுார் வட்டாரம், கேத்தனுாரை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பழனிசாமி, தனது அனுபவத்தை விவசாயிகளுக்கு விளக்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் பற்றியும் கூறினார். உதவி இயக்குனர் மோகனா நன்றி கூறினார். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு எலுமிச்சை நாற்றுகள், விதை பந்துகள் வழங்கப்பட்டது.