உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடகளத்தில் முத்திரை பதித்தது எப்படி?

தடகளத்தில் முத்திரை பதித்தது எப்படி?

தி ருப்பூர் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி, டீ பப்ளிக் பள்ளியில் நடந்தது. மாணவ மாணவியர் உற்சாகமாகப் பங்கேற்று தங்கள் திறனை வெளிக்காட்டினர். தடகளத்தில் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று அதில் 202 பேர் மாநில தடகளப்போட்டிக்கு தேர்வாகினர். வெற்றி பெற்றவர்களில் சிலர், தங்கள் வெற்றி குறித்து நம்முடன் பகிர்ந்தவை: பயிற்சி கைகொடுத்தது நேத்ரா, போல்வால்ட்: நான் 400 மீ., ஓட்டம், போல்வால்ட் இரண்டிலும் கலந்துகொண்டேன். போல்வால்ட்டில் முதலிடம், 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் வென்றேன். பயிற்சியின்போது செய்த யுத்திகளைப் பின்பற்றினேன். பயிற்சியில் இருந்தைவிட அதிகளவு சாதிக்க முடிந்தது. நான் காலையும் மாலையும் சேர்த்து 4 மணி நேரம் பயிற்சி செய்வேன். ஆரம்பத்திலிருந்தே என் பயிற்சியாளர்தான் என்னை ஊக்குவித்தார். குடும்பத்திலும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். குறைவாக மதிப்பிட்டனர் பிரேமா, தடகள ஓட்டம்: 100, 200, 400 மீ., ஓட்டம் மூன்றிலும் தங்கம் வென்றேன். மாவட்டப்போட்டியில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி செய்வேன். தினசரி பயிற்சி, பயிற்சியாளரின் சொல்படி நடத்தல், பெற்றோர் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு, சுய உந்துதல், ஒழுக்கம் ஆகியவைதான் என்னை வெற்றி பெறச்செய்தன. விளையாட்டில் இருப்பதால் என்னை குறைவாக மதிப்பிட்டனர்; அப்போது என் பயிற்சியாளர் ஆதரவாக இருந்து எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ஒடிசா, புவனேஸ்வரில் நடந்த தேசிய அளவிலான தடகளத்தில் வெள்ளி வென்றுள்ளேன். தடகளத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது என் லட்சியம். அனுபவமே ஆசான் சிவமூர்த்தி, நீளம் தாண்டுதல்: ஒரு நாளைக்கு காலை மாலை என இருவேளையும் பயிற்சி செய்வேன். நான் இதற்கு முன் தோற்றுப் போன அனுபவமே என்னை இன்று வெற்றி பெற வைத்தது. நீளம் தாண்டுதல், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றேன். நீளம் தாண்டுதலில் வெள்ளி, 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி, 100 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றேன். வீட்டிலும், மைதானத்திலும் பயிற்சி செய்வேன். 'ஸ்போர்ட்ஸ் மீட்' அப்போது மட்டும் சிறிது படிக்க சிரமமாக இருக்கும், அது முடிந்தவுடன் அனைத்தையும் படித்து முடிப்பேன். மூன்று மந்திரங்கள் கவின் லோகேஷ், தொடர் ஓட்டம்: நான் 4 x 400மீ தொடர் ஓட்டத்தில் முதலிடம், 4 x 100ல் இரண்டாமிடம் வென்றேன். தினமும் 5 மணி நேரம், நான்கு வருடங்களாக பயிற்சி செய்து வருகிறேன். வீட்டிலும் நல்ல ஆதரவு உண்டு. எனக்கு வழிகாட்டி, தன்னம்பிக்கையூட்டியது என் பயிற்சியாளரே. வெற்றி பெறுவதற்கு உழைப்பு, அர்ப்பணிப்பு, நிலைத்திறன் ஆகிய மூன்றும் துணைபுரிகின்றன. அதைத்தான் நான் நம்பினேன், அதன்படி நடந்தேன். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பது என் கனவு. நம்பினேன்; வென்றேன் ஜெசிகா, குண்டு எறிதல்: குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் கலந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி. குண்டு எறிதலில் முதலிடம், வட்டு எறிதலில் இரண்டாமிடம் பெற்றேன். வெற்றி பெறுவதற்கு தன்னால் முடியும் என்று ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். நான் என்னை நம்பினேன்; வென்றேன். என் பயிற்சியாளர், குடும்பத்தினர் என எல்லோரும் நல்ல ஆதரவு கொடுத்தனர். நான் மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறேன்; விளையாட்டையும் விட மாட்டேன், மாநில அளவில் தங்கம் வெல்ல குறிக்கோள் வைத்திருக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ