மேலும் செய்திகள்
சாயும் வாழைகள்: இழப்பீடு பெறுவதில் சிக்கல்
15-Apr-2025
திருப்பூர்; திருப்பூரில், 13ம் தேதி சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பெரும் பரப்பளவில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், சூறைக்காற்றுக்கு பல இடங்களில் வாழை மரங்கள் வீழ்ந்தன. பல இடங்களில், ஓரிரு மாதங்களில் அறுவடை முடியவுள்ள நிலையில், குலை தள்ளிய நிலையில், வாழை வீழ்ந்ததால் விவசாயிகள் பெரும் சோகமடைந்தனர்.தோட்டக்கலைத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து, சேதமடைந்த வாழை பரப்பை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, சேத கணக்கெடுப்பு முடிந்து, தோட்டக்கலை துறையினர் சார்பில், அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் தோட்டக்கலை துணை இணை இயக்குனர் சசிகலா கூறுகையில், ''சூறைக்காற்றுக்கு அவிநாசி, பல்லடம், திருப்பூர் வட்டாரத்தில், 62 விவசாயிகளுக்கு சொந்தமான, 14.46 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் வீழ்ந்துள்ளன. சுமாராக ஒரு எக்டருக்கு, 2,500 முதல், 3,000 வாழை மரங்கள் சூறைக்காற்றுக்கு சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தில் இழப்பீடு கிடைப்பதற்குரிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
15-Apr-2025