மேலும் செய்திகள்
இடி, மின்னலில் இருந்து பாதுகாக்க விழிப்புணர்வு
01-Nov-2025
திருப்பூர்: பருவமழை சமயத்தில், இடி மின்னலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பருவமழையின் போது, ஆங்காங்கே இடி, மின்னல் ஏற்படுவதும், அதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் நடக்கிறது; சில நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிடுகிறது. இந்நிலையில், இடி, மின்னல் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மை திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறியுள்ள கருத்துகள்: இடி, மின்னலின் போது, திறந்தவெளியில் இருக்க நேரிட்டால், காதுகளை இறுக்கமாக மூடிக்கொண்டு, தரையில் குத்துக்கால் இட்டு அமர வேண்டும். காதுகளை இறுக மூடிக் கொள்வதால் கேட்கும் திறன் பாதிப்படைவது குறையும். உட்காரும் போது, குதிகால்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். தரைக்கு எவ்வளவு அருகாமையில் உட்கார்ந்துள்ளோமோ, அந்தளவு மின்னல் தாக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். குதிகால்கள் ஒன்றையொன்று தொட்டு கொண்டிருந்தால், மின்னல் தரையை தாக்கும் போது உருவாகும் மின்சாரம், ஒரு காலின் வழியாக புகுந்து இன்னொரு காலின் வழியாக வெளியேறிவிடும்; இல்லையெனில், அது உடல் முழுக்க பாய்ந்து உயிரிழப்பை கூட ஏற்படுத்தி விடும். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் தான் மின்னல் தாக்கும் என்பதால், மின்னல் ஏற்படும் போது, கூட்டமாய் சேர்ந்து நிற்பதை தவிர்க்க வேண்டும்; குடைகளை பயன்படுத்தக் கூடாது; காரணம், அவற்றின் வழியாகவும் மின்சாரம் பாயும். உயரமான மரங்களை தான், பெரும்பாலும் மின்னல் தாக்கும் என்பதால், மின்னல் தாக்கும் போது, உயரமான மரங்களின் கீழே நிற்க கூடாது. திறந்தவெளியில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். மின்னலின் போது, நீச்சல் குளத்தில் நீந்துவதை தவிர்க்க வேண்டும்; நீரை மின்னல் தாக்கினால், நீரின் வழியே மின்சாரம் பாயும். பேரிடர் பாதிப்பு குறித்த தகவல்களை, தமிழக அரசின், 1070 மற்றும் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
01-Nov-2025