பட்டாசு விற்பனை எப்படி இருந்தது?
திருப்பூர்; கடந்த, 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. வழக்கமாக பண்டிகைக்கு ஒரு வாரம் முன் பட்டாசு கடை களுக்கு அனுமதி வழங்கப்படும்.தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் இருந்த நிலையில், அக்., முதல் வாரம் திருப்பூர் பாண்டியன் நகர், பொன்னம்மாள் நகரில் நாட்டுவெடி வீட்டில் தயாரித்த போது, வெடிவிபத்து ஏற்பட்டது.இரு குழந்தைகள் உட்பட நால்வர் பலியானதால், மாநகர போலீசார் நடப்பாண்டு கட்டுப்பாடு, கண்காணிப்பை அதிகப் படுத்தினர்.கடை உரிமையாளர் ஒவ்வொருவருக்கும் போலீஸ் கமிஷனரே ஒப்புதல் வழங்கினார். விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்பட்டன. பத்து நாட்களுக்கு முன்பாக திறக்கப்படும் பட்டாசுக்கடைகள், தீபாவளிக்கு, ஆறு நாட்கள் முன்புதான் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.இதனால், பண்டிகைக்கு முந்தைய சனி, ஞாயிறு விற்பனை சற்று குறைந்தது. அத்துடன் பெரும்பாலானோர் பட்டாசுகளை சொந்த ஊரில் வாங்கவும் பயணம் மேற்கொண்டு விட்டனர்.பட்டாசு கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவர் கூறுகையில், 'முந்தைய ஆண்டை விட நடப்பாண்டு விற்பனை குறைவு. பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் பட்டாசுகளை முன்பே வாங்கி விட்டனர். தீபாவளிக்கு முந்தைய இரண்டு நாள் விற்பனை என்பது குறைவு தான்,' என்றனர்.பட்டாசு கடை உரிமையாளர் முருகேசன் என்பவர் கூறுகையில், 'போலீசாரின் கெடுபிடிகளால், கடை திறப்பதில் தாமதம் நிலவியது.அனுமதி வழங்கப்பட்ட நாள் முதல் விடிய விடிய செயல்பட்டாலும், கடந்தாண்டை விட நடப்பாண்டு விற்பனை அதிகரிக்கவில்லை.அனைத்து பட்டாசுகளும் விற்றுத்தீர்ந்திருக்க வாய்ப்பில்லாத சூழல் உருவாகியது. அதே நேரம், முழுமையாக குறைந்து விட்டதாகவும் கூற முடியாது,' என்றார்.