ஐதராபாத், கோவா அணிகள் வெற்றி
திருப்பூர் : 'திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட்' சார்பில், 16 வயதுக்குட்பட்ட அகில இந்திய அணிகளுக்கு இடையேயான டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி, முருகம்பாளையம், ஒயர்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. 30 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது.நேற்று காலை நடந்த போட்டியில், ஐதராபாத் கோச்சிங் பியாண்ட் அணியும், கர்நாடகா கே.பி.என்.சி.ஏ., அணியும் மோதின. முதலில் 'பேட்' செய்த, கோச்சிங் பியாண்ட் அணி, 30 ஓவரில், 10 விக்கெட் இழந்து, 165 ரன் எடுத்தது. நாமன் சவுத்ரி, 56 பந்தில், 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட, 56 ரன்; அபைநாயர், 57 பந்தில், 5 பவுண்டரி உட்பட, 44 ரன் எடுத்தனர். பந்து வீசிய கே.பி.என்.சி.ஏ., அணியின் சையது ஜாவத், 3 விக்கெட் வீழ்த்தினார்.அடுத்து 'பேட்' செய்த கே.பி.என்.சி.ஏ., அணி, 15.5 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 51 ரன்களை மட்டுமே எடுத்தது. பந்து வீசிய கோச்சிங் பியாண்ட் அணியின், பரத் ஷர்மா, அபிவந்த் சத்யன் ஆகியோர், தலா, 3 விக்கெட் வீழ்த்தினர். 114 ரன் வித்தியாசத்தில் கோச்சிங் பியாண்டட் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை, அணியின் நாமன் சவுத்ரி பெற்றார்.n மாலை நடந்த போட்டியில், கோவா ஸ்பார்க்ளிங் ஸ்டார்ஸ் அணியும், ஆந்திரா அனந்தபூர் அணியும் மோதின. டாஸ் வென்ற ஸ்பார்க்ளிங் ஸ்டார்ஸ் அணியினர், 30 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 140 ரன் எடுத்தனர். அதிகபட்சம் அணியின் பர்ஹான் தாஷ், 53 பந்தில், 7 பவுண்டரி உட்பட 49 ரன்; ஆதர்வ் சங்கர் நாயக், 43 பந்தில், 4 பவுண்டரி உட்பட, 32 ரன் எடுத்தனர். பந்து வீசிய ஆந்திரா அனந்தபூர் அணியின் மகேந்திரா சாய் ராயல், 3 விக்கெட்; லோக்நாத் மற்றும் தன்மய் கார்த்தி ரெட்டி ஆகியோர் தலா, 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 'பேட்' செய்த, அனந்தபூர் அணி 20.2 ஓவரில், 10 விக்கெட் இழப்புக்கு, 66 ரன்னில் சுருண்டது.பந்து வீசிய கோவா அணியின் ஜெய் கங்குரி, 3 விக்கெட் வீழ்த்தினார். 74 ரன் வித்தியாசத்தில் கோவா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை, அணியின் ஜெய் கங்குரி பெற்றார்.