நவராத்திரிக்கு தயாராகும் சிலைகள் திருப்பூரில் முகாமிட்ட கலைஞர்கள்
திருப்பூர் : பக்தர்களின் நவராத்திரி விழா கொண்டாட்டத்துக்காக, திருப்பூரில் துர்கா சிலைகள் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.நவராத்திரி விழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகளை கரைப்பது போல், வழிபாட்டுக்கு பிறகு துர்க்கை சிலைகளும் ஆற்றில் கரைக்கப்படுகின்றன.திருப்பூரில் வசிக்கும் குஜராத், ராஜஸ்தான் மக்கள், திருப்பூரிலேயே, துர்க்கா வழிபாட்டை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு, நவராத்திரி துவங்கி, ஒன்பது நாட்களுக்கு சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.இந்நிலையில், மேற்கு வங்கம், ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த கைவினை கலைஞர்களை அழைத்து வந்து, திருப்பூரில் சிலை வடிவமைப்பு பணி துவங்கியுள்ளது. மரக்குச்சிகள், வைக்கோல் மற்றும் கங்கை மண் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சிலை உருவமாக அமைத்த பிறகு, சந்தனம் போன்ற பொருட்களை கொண்டு முகம் வடிவமைக்கப்படும்.அலங்கார சவுரி, ஆடைகள் மற்றும் மாலைகள் அணிவித்து, நவராத்திரி விழாவுக்கு தயார்படுத்தி கொடுக்கப்படும். துர்க்கா, விநாயகர், முருகர் என, பல்வேறு வகையான சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. சிலை வடிவமைப்பு பணிகள், 10 நாட்களில் நிறைவு பெறும் என, சிலை வடிவமைப்பு கலைஞர்கள் தெரிவித்தனர்.