சட்டவிரோத மின்பாதை அமைப்பு
காங்கயம்; காங்கயம், தாராபுரத்தில் சட்டவிரோதமாக மின்பாதை அமைக்கும் பணி நடப்பதாக விவசாயிகள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.இதுதொடர்பாக, விவசாயிகள், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவிடம் நேற்று மனு விவரம்:தாராபுரம், காங்கயம் தாலுகாவில் தனியார் பெரு நிறுவனங்கள் காற்றாலை அமைத்து, மின் உற்பத்தி செய்து வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்படும் காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தங்களது சொந்த துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்ல, கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை துறை சாலைகளில், 33 கே.வி., மின் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளன.இதுதொடர்பாக அரசிடம் முறையாக அனுமதி பெறவில்லை. கிராம ஊராட்சிகளிலும் தீர்மானங்கள் மூலம் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறை இடங்களில் அமைக்கப்படும் மின் பாதைகளுக்கு, எவ்வித விதிகளையும், நிபந்தனைகளையும் கடைபிடிப்பதில்லை.இதனால், ஏராளமான மரங்களை வெட்டி வருகின்றனர். இந்த மின் பாதைகளால் எதிர்காலத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய முடியாது. மரங்களை நட முடியாது. உள்ளாட்சி நிர்வாகங்கள் ஆழ்குழாய் கிணறு அமைக்க முடியாத சூழல் ஏற்படும்.இதுதொடர்பாக தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த, 12ம் தேதி பேச்சு நடந்தது. காங்கயத்தில், 14ம் தேதி நடந்தது. தனியார் கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் எவ்வித முறையான அனுமதி பெறவில்லை. பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.தவறான தகவல்களையும், ஆவணங்களையும் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்து முறைகேடு செய்துள்ளனர். கிராமத்தின் பசுமையை அழிக்கும் வகையில் சட்டவிரோதமாக மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.