உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சட்ட விரோதமாக மடைகளை அடைத்து நீர் கபளீகரம் ; விவசாயிகள் கால்வாயில் இறங்கி போராட்டம்

சட்ட விரோதமாக மடைகளை அடைத்து நீர் கபளீகரம் ; விவசாயிகள் கால்வாயில் இறங்கி போராட்டம்

உடுமலை; உடுமலை அமராவதி அணை உபரி நீரை, பாசன பகுதிகளில் காய்ந்து வரும் நிலைப்பயிர்களை காக்க வழங்காமல், பாசனம் அல்லாத பகுதிகளுக்கு, கால்வாய் மடைகளை அடைத்து, சட்ட விரோதமாக கொண்டு செல்வதை கண்டித்து, விவசாயிகள் கால்வாய் நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தென்மேற்கு பருவ மழையால் அமராவதி அணை, கடந்த ஜூன் 16ல் நிரம்பிய நிலையில், கடந்த, 25 நாட்களாக உபரி நீர், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டு வருகிறது.அமராவதி பிரதான கால்வாய், புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள பாசன வசதி பெற்று வருகின்றன.இப்பகுதியில் தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நிலைப்பயிர்களை காக்கவும், பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடி துவக்கவும் நீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனால், பிரதான கால்வாயில் திறக்கப்பட்ட உபரி நீரை, பாசன பகுதி விவசாயிகள் பயன்படுத்த முடியாமல், 96 கிளைக்கால்வாய் மடைகளை அடைத்து, பாசன பகுதி இல்லாத பகுதிகளிலுள்ள குளம், குட்டைகளுக்கு அதிகாரிகள் நீர் வழங்கி வருகின்றனர்.இதனைக்கண்டித்து, புதிய ஆயக்கட்டு விவசாயிகள், மைவாடி, செங்கண்டிபுதுார் பகுதியிலுள்ள பிரதான கால்வாயில், நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன் தலைமை வகித்தார்.

சட்ட விரோதம்

விவசாயிகள் கூறியதாவது:அமராவதி பிரதான கால்வாய் பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர்கள் காய்ந்து வருவதோடு, பாசனமும் துவக்க முடியாத நிலை உள்ளது.ஆனால், சட்ட விரோதமாகவும், இதுவரை இல்லாத நடைமுறையாக, பாசன வசதியில்லாத பகுதிகள் பயன்பெறும் வகையில், தாராபுரம் பகுதியிலுள்ள, 3 குளங்களுக்கு நீரை கொண்டு செல்கின்றனர்.இதற்காக, பிரதான கால்வாயில் அமைந்துள்ள, 96 கிளைக்கால்வாய் மடைகளையும் அடைத்து, ஆளும்கட்சியினர் துாண்டுதல் மற்றும் லஞ்சம் பெற்றுக்கொண்டு, எந்த உத்தரவும் இல்லாமல், நீர் வளத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக நீரை கொண்டு செல்கின்றனர்.உடனடியாக பாசன பகுதிகளுக்கு நீர் வழங்காவிட்டால், கால்வாய் மடைகளில் அமைத்துள்ள பூட்டுக்களை உடைத்து, விவசாயிகள் நீர் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை