என்.எச்., ரோட்டோரம் எண்ணெய் குழாய் பதிக்கலாமே! பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
திருப்பூர் : 'கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் பதித்த குழாய்களையும் தோண்டி எடுத்து, தேசிய நெடுஞ்சாலை வழியாகவே எண்ணெய் குழாய்களை பதிக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரத் பெட்ரோலியம் நிறுவனம், 1999ல், கோவையில் இருந்து கரூர் வரை, எண்ணெய் குழாய் அமைத்தது. அதற்காக, 60 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதனை தவிர்த்து உள்ள நிலத்தை, எவ்வகையிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளதால், நிலத்துக்கு மதிப்பும் குறைந்துவிட்டது. தமிழக அரசின் கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டதால், அதற்கு பிறகு நடந்த எண்ணெய் குழாய் பணிகள், தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக நடந்தன.ஏற்கனவே, எண்ணெய் குழாய் பதித்து, விளை நிலம் வீணாகப் போன நிலையில், 25 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் குழாய் பதிப்பது, உரிமை மீறல் என, விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே, புதிதாக குழாய் பதிக்கும் திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்த வேண்டும்; பழைய குழாய்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என, நுாற்றுக்கணக்கான விவசாயிகள் நேற்று கலெக்டரிடம் முறையிட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, நேற்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பேசியதாவது:கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளை ஏமாற்றிய நிறுவனம், எவ்வித அனுமதியும் பெறாமல், இரண்டாம் கட்டமாக குழாய் பதிக்க தயாரானது. விவசாயிகள் கோர்ட்டில் தடையாணை பெற்றுள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மூன்றாம் கட்டமாக குழாய் பதிக்கவும், அனுமதி வேண்டி, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. கோவை - கரூர் வரை பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அப்புறப்படுத்தி, புதிய திட்டத்துடன் சேர்த்து, நெடுஞ்சாலைத்துறை சாலை மார்க்கமாக பதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். -----------------------------விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கொடுக்க திரண்ட விவசாயிகள்.
வரும், 2ல் பேச்சுவார்த்தை
கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில்,''கோர்ட்டில் தடையாணை பெற்றதும், முழு விவரத்தையும், மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக, முழு விவரத்தையும், சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 2ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் அழைத்து பேசுகிறோம். முழு விவரமும் தெரிந்த பின், விவசாயிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்,'' என்றார்.