பாண்டியாறு - மாயாறு திட்டம் செயல்படுத்துங்கள்: அமைச்சர் துரைமுருகனுக்கு யோசனை
திருப்பூர்; பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி வரும் தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் வீரப்பன் கூறியதாவது:தமிழகத்தில் உருவாகும் பாண்டியாறு, 32 கி.மீ, தமிழக எல்லையில் ஓடி, மேற்கே திரும்பி, கேரளாவுக்குள் நுழைந்து புன்னம்புழா ஆற்றில் இணைந்து, அரபிக்கடலில் கலக்கிறது. கேரள எல்லைக்குள் ஒரு தடுப்பணை கட்டி, அதில் அந்த நீரை சேமித்து, மின் உற்பத்தி செய்து, மின்சாரத்தை கேரளாவுக்கும், தண்ணீரை தமிழகத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம் என்பது மின் வாரியத்தினரின் யோசனை; இது கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது; இந்த விவகாரத்தில் கேரள அரசு, எவ்வித ஆர்வத்தையும் காட்டுவதாக தெரியவில்லை.மின்வாரியத்தினர் யோசனைப்படி, அப்படியே தடுப்பணை அமைத்து நீரை பெற்றாலும், குந்தா, போர்த்திமந்து, அவலாஞ்சி உள்ளிட்ட, நீர் மின் நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தான் திருப்பிவிடப்படுமே தவிர, கொங்கு மண்டல மக்களின் பாசனத்துக்கு பயன்தராது.தற்போது, கொங்கு மண்டலத்தில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தால், 1,000க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளில் பவானி ஆற்றின் உபரி நீர் நிரப்பப்பட்டு வருகிறது. மழை வளம் குறைவாக இருப்பதாலும், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருவதாலும், விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்க, கொங்கு மண்டலத்தில், விடுபட்ட, 1,000க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டும் என, பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அத்திக்கடவு திட்டத்தின் கீழ், 1.5 டி.எம்.சி., நீர் மட்டுமே, பவானி ஆற்றில் இருந்து பெறப்படுகிறது; அதுவும், காலிங்கராயன் அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் வெளியேறும் போது தான் இது சாத்தியமாகும்.சராசரியாக, 10 ஆண்டுகளில், வெறும், 2, 3 ஆண்டுகள் மட்டுமே, அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும். எனவே, வெறும், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பாண்டியாறு நீரை, தெப்பக்காடு மாயாற்றில் திருப்பி விடுவதன் வாயிலாக, பவானி ஆற்றில் ஆண்டு முழுக்க நீர் வரத்து இருக்கும்; அத்திக்கடவு திட்டத்துக்கும் கூடுதல் நீர் கிடைக்கும். கொங்கு மண்டலத்தில் விவசாயம் செழிக்கும். எனவே, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை கைவிட்டு, பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்த அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.இவ்வாறு, வீரப்பன் கூறினார்.பாண்டியாறு பூர்வாங்க பாசன சபை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு கூறுகையில், ''பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் என்பது, போகாத ஊருக்கு வழி காட்டுவது போல் பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது. எனவே, இத்திட்டத்தை சட்டசபையில் முன்னெடுக்கும் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள், திட்டத்தின் நிலையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பாண்டியாறு - மாயாறு திட்டத்துக்கு செயலாக்கம் கொடுக்க குரல் கொடுக்க வேண்டும்,'' என்றார்.