மேலும் செய்திகள்
'டீமா' உறுப்பினர்கள் வேலைநிறுத்தம்
19-Dec-2024
திருப்பூர் பின்னலாடை தொழில், தொழில் துறையினரின் சுயமான முயற்சியாலும், கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களுடனும், வெளிநாட்டு வர்த்தகர்களுடனும் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதால், அதற்கு ஏற்ற சிறப்பு ஊக்குவிப்புகளை, அரசு தரப்பில் இருந்து எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் வந்திருந்த துணை முதல்வர் உதயநிதியை சந்தித்த தொழில்துறையினர், பின்னலாடை தொழிலுக்கும், திருப்பூருக்குமான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். மின் கட்டண சலுகை
மஹாராஷ்டிரா, பீஹார், ம.பி., போன்ற மாநிலங்கள், பல்வேறு சலுகைகளை அளித்து, தொழில் துவங்க அழைப்பு விடுக்கின்றன. தமிழக அரசும், குறு, சிறு தொழில்களை பாதுகாக்கவும், தக்கவைக்கவும், மின் கட்டணம், வரியினங்களில் சிறப்பு சலுகை அளிக்க முன்வர வேண்டும் என்பதுதான் பிரதானமாக இருந்தது. மின் கட்டணச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பசுமை மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்; அதற்காக, சோலார், காற்றாலை மின்சாரம், மேற்கூரை சோலார் உற்பத்திக்கு, பசுமை ஆற்றல் மானியம் வழங்க வேண்டும். பின்னலாடை வாரியம்
திருப்பூர் பின்னலாடைத் தொழிலால், நம் நாட்டுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. திருப்பூர் கிளஸ்டர், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் மாவட்டமாகவும் இருக்கிறது. பின்னலாடை தொழிலின் எதிர்கால நலன் கருதி, பின்னலாடை தொழில் வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். மத்திய, மாநில அரசு திட்டங்களை பரிசீலித்து, திருப்பூரில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வக வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, திருப்பூரில் ஏற்றுமதி மையம் அமைக்கவும், பின்னல் துணி (பேப்ரிக்) பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு தொழில் பூங்கா
'மினி டெக்ஸ்டைல் பார்க்' திட்டத்தில், மாவட்டம் தோறும் சிறு தொழிற்பூங்காவை உருவாக்கி, குறு, சிறு தொழில்துறையினருக்கு திட்டங்களை வழங்க வேண்டும். திருப்பூர் சுற்றுப்பகுதியில், 'மினி டெக்ஸ்டைல் பார்க்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு திட்டங்களில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிகப்படியான சலுகை மற்றும் மானிய உதவி கிடைக்கிறது. எம்.எஸ்.எம்.இ., அல்லாத நிறுவனங்களுக்கும், உற்பத்தி, வேலைவாய்ப்பின் அடிப்படையில், தேவையான ஊக்குவிப்பு சலுகை வழங்க வேண்டும். நிலையான 'கிளஸ்டர்'
பல்வேறு நாடுகளும், பசுமை சார் உற்பத்தியில், நீடித்த நிலைத்தன்மையை எதிர்பார்க்கின்றன. அவ்வகையில், திருப்பூர் பின்னலாடை கிளஸ்டர் என்பது நீடித்த நிலைத்தன்மை கொண்டது என்ற நிலையை ஏற்படுத்திட உதவ வேண்டும். தொழிலாளருக்கு, குறைந்த வாடகையில் தங்குமிட வசதி ஏற்படுத்த வேண்டும்.தொழிலாளருக்காக இயக்கும் போக்குவரத்துக்கு, சாலை வரி விதிக்கப்படுகிறது. பெண் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் வாகனங்களுக்கு, சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தொழில்துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது, முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
19-Dec-2024