ஜி.எஸ்.டி. குறைப்பால் தீபாவளி விற்பனை அதிகரிப்பு: மக்களுக்கு பலன்; வணிகர்கள் உற்சாகம்
திருப்பூர்: ஜி.எஸ்.டி., மறுசீரமைப்புக்கு பிறகு, பல்வேறு பொருட்களுக்கு வரிசுமை குறைந்ததால், தீபாவளியை முன்னிட்டு, 'டிவி', 'ஏசி', 'பிரிட்ஜ்', 'வாஷிங் மெஷின்' உள்பட பல்வேறு பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. நெய் உள்ளிட்டவற்றின் விற்பனை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் தீபாவளி விற்பனை அதிகரித்துள்ளதாக திருப்பூரைச் சேர்ந்த வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு கொண்டு வந்த மறுசீரமைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது. 5 - 12 - 18 - 28 சதவீதம் என 4 அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. 5 மற்றும 18 சதவீதம் என இரு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டது. 'தீபாவளி போனஸ் போன்றது, இந்த அறிவிப்பு' என்று பொதுமக்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஜி.எஸ்.டி. மறுசீரமைப்புக்கு பின், பொருட்களின் விலை குறைந்துள்ளதால், திருப்பூரில் இந்தாண்டு தீபாவளி விற்பனை களைகட்டியதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். 'டிவி' விற்பனை ஜோர் தளபதி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் ேஷாரூம் உரிமையாளர்: 32 'இன்ச் டிவி'க்கு மட்டும், 18 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. மற்ற, 43 'இன்ச்' முதல் உள்ள அனைத்து 'டிவி'களுக்கும், 28 சதவீதமாக இருந்தது; அனைத்து 'டிவி'களுக்கும், 18 சதவீதமாக வரியை குறைத்துள்ளனர். தீபாவளி விற்பனையில், வாடிக்கையாளர்கள் பெரிய திரையுள்ள 'டிவி'தான் வாங்கி செல்கின்றனர். 'ஏசி'க்கான ஜி.எஸ்.டி., 28 சதவீதமக இருந்தது, 18 சதவீதமாக குறைந்துள்ளது; 'டிஸ்வாஷர்' வரி 28 சதவீதமாக இருந்தது, 18 சதவீதமாக குறைந்துள்ளது. எவர்சில்வர் பாத்திரத்துக்கான வரி, 12 சதவீதமாக இருந்தது, 5 சதவீதமாக குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால், தீபாவளி சிறப்பு விற்பனையில் அதிக விலை உள்ள பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது; விலையும் குறைந்துள்ளது. சாமானியர்களுக்கு பயன் கண்ணையன், தலைவர், பல்லடம் வணிகர் சங்க பேரமைப்பு: அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டது, பொதுமக்களுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. நெய் 10 சதவீதம் வரை விற்பனை உயர்ந்துள்ளது. நெய், வெண்ணெய் மீதான வரி குறைக்கப்பட்டதால், கிலோவுக்கு, 40 முதல் 50 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. உதாரணமாக, 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை கிலோ நெய், தற்போது, 435 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதேபோல், உலர் பழங்கள், நொறுக்குத் தீனி ஆகியவற்றுக்கு, 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது சாதாரண பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கும். பண்டிகை காலம் என்பதால், புத்தாடை, இனிப்புகளுக்கு அடுத்து, வீடுகளுக்கு தேவையான ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் அதிகம் வாங்குவர். இது போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு, ஜி.எஸ்.டி. குறைப்பால், பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். 'பேக்கிங்' பொருள் விலை குறைந்தது ------------------------------ சாமி, மாவட்ட பொருளாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை: ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால், பல்வேறு பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது; பெரும்பாலான 'பிஸ்கட்'கள் விலை குறைந்துள்ளது. பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விலை குறையவில்லை. 'பேக்கிங்' பொருட்கள், சோப்பு விலை குறைந்துள்ளது. பேப்ரிக் விலை குறையும் -----------------------மருதாசலமூர்த்தி, 'பேப்ரிக்' விற்பனையாளர்: 'பேப்ரிக்' ரகங்களுக்கு, 5 சதவீத வரி தொடர்கிறது; ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பின் போது, செயற்கை நுாலுக்கான வரி, 18 சதவீதமாக இருந்தது, 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால், 'பேப்ரிக்' விலை குறைய வாய்ப்புள்ளது. லுாதியானா, திருப்பூரில், அதிகம் இருப்பு வைத்துள்ளதால், இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் விலை குறைப்பு தெரியவரும். தற்போது, கிலோ, 180 ரூபாய் முதல், 620 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நுால் வரிகுறைப்பு நடைமுறைக்கு வரும்போது, விலை சற்று குறையும். வசூலிப்பதே இல்லை ------------------------- கனகராஜ், ஓட்டல் உரிமையாளர்: ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில், பெரும்பாலான பொருளுக்கு, 5 சதவீதமாக தொடர்கிறது. இருப்பினும், மூலப்பொருள் வாங்கும் போது, பல்வேறு வரி செலுத்துகிறோம்; உணவு விற்பனை வாயிலாக வரி வசூலிக்கிறோம். பன்னீர், வெண்ணெய் வரி குறைந்துள்ளது. மளிகை உட்பட பல்வேறு மூலப்பொருள் வாங்கும் போது, 5 முதல், 18 சதவீதம் செலுத்துகிறோம்; இருப்பினும், கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெற முடியாது என்பதால், தரமான உணவு பொருள் விலை குறைய வாய்ப்பில்லை. சிறிய ஓட்டல்கள், வாடிக்கையாளரிடம், ஜி.எஸ்.டி., வசூலிப்பதே இல்லை. எங்களது லாபத்தில் இருந்துதான் செலுத்தி வருகிறோம். முழுமையான வரிவிலக்கு -------------------- குமார், துணைத்தலைவர், காதர்பேட்டை செகண்ட்ஸ் பனியன் வியாபாரிகள் சங்கம்: பனியன் ஆடைகளுக்கு, வழக்கம் போல், 5 சதவீதம் வரி தொடர்கிறது; மறுசீரமைப்பின் வாயிலாக, உள்நாட்டு சந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும். தீபாவளி விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் பரவாயில்லை. இருப்பினும், சுதேசி கொள்கையை வளர்க்கும் வகையில், உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வரி குறைப்பு செய்ய வேண்டும். சிரமம் குறைந்தது --------------------- கதிரேசன், எலாஸ்டிக் உற்பத்தியாளர்: 'எலாஸ்டிக்' தயாரிப்புக்கான, ரப்பர் மற்றும் பாலியஸ்டர் நுால் ஆகியவற்றின் வரி, 12 சதவீதமாக இருந்தது; 5 சதவீதமாக குறைத்துள்ளனர். ஏற்கனவே, எலாஸ்டிக் விற்பனைக்கு வரி 5 சதவீதம் இருப்பதால், சமன் செய்யப்பட்டுவிட்டது. முன்பு, அதிக வரி செலுத்தி, பெரும் தொகை அரசு கணக்கில் தேங்கியது; இனிமேல் அதுபோல் இருக்காது. உள்ளீட்டு வரி, வெளியீட்டு வரி சமனாக இருக்கிறது. இனிமேல், லட்சக்கணக்கான ரூபாய் வரி தேக்கமடைவது தவிர்க்கப்படும். வெள்ளிக்கட்டி வாங்க ஆர்வம் ------------------------ ஜெயப்பிரகாஷ், நகைக்கடை உரிமையாளர்: தங்க நகைகளுக்கு, 3 சதவீதம் என்ற வரி அப்படியே தொடர்கிறது. நகைக்கடைகளுக்கு வரி ஒரு பிரச்னையாக இருப்பதில்லை. தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை, இரண்டு நாட்கள் முன்னாளில் இருந்துதான் விற்பனை நடக்கும்; தீபாவளிக்கு பிறகு, முகர்த்த நாட்கள் விற்பனை நன்றாக இருக்கும். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இல்லை; அதற்கு பின் விற்பனை நன்றாக இருக்கிறது. மக்களிடையே, ஆபரணம் வாங்குவதை காட்டிலும், தங்கக் காசு மற்றும் வெள்ளி கட்டிகள் வாங்குவது, இந்தாண்டில் அதிகரித்துள்ளது. வரி குறையவே இல்லை ------------------- ஈஸ்வரன், பர்னிச்சர் விற்பனையாளர்: பர்னிச்சர் ரகங்களுக்கு 18 சதவீதம் வரி அப்படியே தொடர்கிறது; இருப்பினும், வீடுகளுக்கு தேவையான பர்னிச்சர்களை மக்கள் வாங்குகின்றனர். நாங்களும் இயன்றவரை விலையில் தள்ளுபடி அளிக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு வரி குறைந்துள்ளது. விசாரணை அதிகம் நடக்கிறது; தீபாவளி பண்டிகை விற்பனை, கடைசி நேரத்தில்தான் வேகமெடுக்குமென காத்திருக்கிறோம்.