துாய்மைப்பணியாளர்களை தொழில்முனைவோராக்க முனைப்பு
திருப்பூர் மாநகராட்சியில் துாய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்கும் வகையில், கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் வாழ்வு மேம்படுத்தும் வகையில், அவர்களை தொழில் முனைவோர் ஆக உயர்த்தும் வகையில் அரசு திட்டமிட்டுள்ளது.அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியில் கடந்தாண்டு, ஐந்து துாய்மை பணியாளர்கள் பங்குதாரர்களாக அமைந்த கழிவு நீர் அகற்றும் வாகனம் வழங்கப்பட்டது.அதேபோல் மற்றொரு வாகனம் மேலும், ஐந்து துாய்மைப் பணியாளர்கள் பெயரில், திருப்பூர் ராக்கியாபாளையம் கிளை பாங்க் ஆப் பரோடா சார்பில், 47 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதில், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்கப்பட்டது.இதை மாநகராட்சி பகுதியில், பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி, மைய அலுவலகத்தில் நடந்தது.மேயர் தினேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். மண்டல குழு தலைவர் கோவிந்தராஜ், துணை கமிஷனர் சுந்தரராஜன், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வாகனத்தை மாநகராட்சி பகுதியில் வாடகை அடிப்படையில் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும்.அதற்கான வாடகை தொகை நேரடியாக வங்கி கணக்கில், இதன் கடனுக்கு செலுத்தப்படும். வங்கி கடன் முடிவுற்ற பின், இதன் பங்குதாரர்களாக உள்ள துாய்மைப் பணியாளர்கள் வாடகை தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.