உடுமலை;அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, புதிய நெல் ரகங்களான கோ-54 மற்றும் கோ--55 விதைப்பண்ணைகளை விதைச்சான்றுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அமராவதி புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.தரமான விதைகள் உற்பத்தியை உறுதி செய்யும் வகையில், விதைச்சான்று அலுவலர்கள்,பூக்கும் பருவம் மற்றும் அறுவடை பருவங்களில் வயலாய்வு மேற்கொண்டு, கலவன்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின், உரிமம் பெற்ற விதை சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு செய்ய விதைச்சான்று அலுவலர்களால் அனுமதி வழங்கப்படுகிறது.அதன்பின், விதைச்சான்று அலுவலர்கள் முன்னிலையில், சுத்திகரிப்பு செய்து விதை மாதிரிகள் விதை ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு, புறத்துாய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் மற்றும் பிற இனகலப்பு ஆய்வு செய்யப்பட்டு, தரமானது என ஆய்வறிக்கை பெறப்படுகிறது. அதன்பின் சான்று அட்டைகள் பொருத்தி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.உடுமலை, தாராபுரம் பகுதிகளில், புதிய நெல் ரகங்களான கோ-54 மற்றும் கோ-55 ரகங்களுக்கான, 'டான்சிடா' விதை உற்பத்தியாளராக பதிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:கோ-54 ரகமானது, சி.பி.,04110 மற்றும் சி.பி.,05501 ரகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 110 முதல், 115 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், குறுகிய கால நெல் ரகமாகும்.ஏக்கருக்கு, 2,500 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. மேலும், குலை நோய், இலை உறை அழுகல் நோய், இலைச்சுருட்டு புழுவிற்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையதாகும்.கோ-55 ரகமானது, ஏ.டி.டி.,43 மற்றும் ஜி.இ.பி.,24 ரகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது, 110-115 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்குறுகிய கால நெல் ரகமாகும்.ஏக்கருக்கு, 2,400 கிலோ மகசூல் தரக்கூடியது. மேலும், குலைநோய், இலைஉறை அழுகல் மற்றும் வைரஸ் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது.விதைப்பண்ணைகளில், வேளாண் அலுவலர் கணேசன், விதைச்சான்று அலுவலர் மனோஜ்குமார், உதவி விதை அலுவலர் தேசிங்குராஜன் ஆகியோரை கொண்ட குழுவினரால் வயலாய்வு செய்யப்படுகிறது.விதைப்பண்ணை விவசாயிகளுக்கு, விதைப்பண்ணை மற்றும் பயிர்சார்ந்த தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.