மாவட்டம் முழுவதும் தீவிரப் பாதுகாப்பு
திருப்பூர்; ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். நகரில், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், போலீசார், ஊர்க்காவல் படையினர் உட்பட, 500 பேர்; புறநகரில் எஸ்.பி., கிரிஷ் அசோக்யாதவ் உத்தரவின் பேரில், 500 போலீசார் என, மாவட்டம் முழுவதும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வழிபாட்டு தலங்கள் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் இரண்டு பிரிவுகளாக சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ''நகரில் போலீஸ்செக்போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கை, சுழற்சி முறையில் ரோந்து போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். வழிபாட்டு தலங்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பணியில் போலீசார் உள்ளனர்.பதட்டமான, 28 இடங்களில் முழு நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்,'' என்றார்.