கண்ணுக்கு தெரியாத கட்டணம் உயர்வு: கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கவலை
திருப்பூர்:சுமைப்பணி தொழிலாளர் 'மாமூல்' உட்பட, கண்ணுக்கு தெரியாமல் உயரும் பல்வகை கட்டணங்களால், கன்டெய்னர் லாரி தொழில் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக, உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், 90 சதவீதம், துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவசரமாக அனுப்ப வேண்டிய சரக்குகள், விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூருக்கும், துாத்துக்குடி துறைமுகத்துக்கும் இடையே, சரக்கு போக்குவரத்துக்காக, ஏற்றுமதிக்கான கன்டெய்னர்கள் இயக்கப்படுகின்றன. கடந்த, 30 ஆண்டுகளாக, கன்டெய்னர் லாரி போக்குவரத்து சேவை நடந்து கொண்டிருக்கிறது. திருப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்படும் சரக்கு பெட்டிகள், துறைமுகங்களில் உள்ள சரக்கு முனையங்களில் இறக்கி வைக்கப்படுகின்றன. அங்கு, சுங்கவரித்துறை சரிபார்த்த பிறகு, மற்றொரு கன்டெய்னரில் ஏற்றி, கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூரில் இருந்து செல்லும் சரக்கு பெட்டிகளை, சரக்கு முனையங்களில் இறக்கி வைக்க, நுாற்றுக்கணக்கான சுமைப்பணியாளர் பணியாற்றி வருகின்றனர். அப்பணியாளருக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள், சம்பந்தப்பட்ட சரக்கு முனையங்களை சார்ந்தது. இருப்பினும், தங்கள் பெட்டிகளை விரைவாக இறக்கி வைக்க ஊக்குவிக்கும் வகையில், டீ, காபி 'பேட்டா'வாக, 100 ரூபாய், மாமூல் என்ற பெயரில் கொடுக்கும் பழக்கம் இருந்தது. அதற்காக, எவ்வித ரசீதும் கிடையாது; கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர் ஊக்குவிப்புக்காக வழங்கி வந்தனர். இன்று, அதுவே பெரிய சுமையாக மாறிவிட்டது. துவக்கத்தில், 100, 200 என்று பெற்று வந்தவர்கள், இன்று, ஒரு லாரியில் இருந்து சரக்கை இறக்கி வைக்க, 1,500 ரூபாய் வரை 'கறார்' வசூல் செய்யும் நிலை வந்துவிட்டது. கடுமையாக 'மாமூல்' உயர்த்தப்பட்ட நிலையில், லாரி வேலை நிறுத்தம் செய்தனர். அதற்கு பிறகு, பேச்சுவார்த்தை நடத்தி, 'மாமூல்' தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 1 ம் தேதி முதல், மீண்டும் 30 சதவீதம் வரை மாமூல் உயர்த்தி வழங்க வேண்டுமென, சரக்கு முனைய தொழிலாளர்கள் நெருக்கடி கொடுக்க துவங்கிவிட்டனர். 'மாமூல்' வசூலால் பாதிப்பு ---------------------- 'மாமூல்' என்ற பெயரில் வாங்கும் பணத்தை உயர்த்தியுள்ளனர். கடந்த 1ம் தேதி முதல், 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். கன்டெய்னர் சரக்குகளை விரைவாக இறக்கி வைக்க வேண்டும் என்பதால், இவ்வாறு நெருக்கடி கொடுக்கின்றனர். சிறிய வாகனங்களுக்கான 'மாமூல்', 500 ரூபாயாகவும், நடுத்தரவாகனங்களுக்கு, 600 ரூபாய் வரையிலும், பெரிய வாகனங்களுக்கு, 1,500 ரூபாய் வரையிலும் 'கறார்' வசூல் செய்கின்றனர். இதுகுறித்து யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை. திருப்பூரில் இருந்து, 350 கி.மீ. தொலைவில் உள்ள துாத்துக்குடி சென்றுவர, ஐந்து சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டும். விஜயமங்கலம் சுங்கச்சாவடிக்கு - 75 ரூபாய், கொழிஞ்சம்பட்டி (கொடைரோடு) - 165 ரூபாய், வளையன்குளம் - 30 ரூபாய், எலியார்பதி- 165 ரூபாய், புதுார்பாண்டியார்புரம்- 170 ரூபாய் என்று சுங்கவரி செலுத்துகிறோம். சமீபத்தில், சுங்கவரியும், 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, சுமைப்பணி தொழிலாளர் 'மாமூல்' என்று, கண்ணுக்கு தெரியாமல், பல்வேறு வகையான கட்டணங்கள் உயர்ந்துள்ளன; இனி, எப்படித்தான் தொழில் நடத்துவது என்றே தெரியவில்லை. கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். - ஏற்றுமதி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள்