உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தாறுமாறாக பார்க்கிங்; ரோட்டில் நெரிசல்; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதிப்பு

 தாறுமாறாக பார்க்கிங்; ரோட்டில் நெரிசல்; பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பாதிப்பு

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட் உட்பட பகுதிகளில், 'பார்க்கிங்' விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால், தேசிய நெடுஞ்சாலையில், நெரிசல் நிரந்தரமாகியுள்ளது; போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியும். உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நெரிசலை தவிர்க்க, சென்டர்மீடியன் அமைக்கப்பட்டது. ஒரு பகுதியில், நடைபாதையும், மறுபகுதியில், தனியார் வணிக வளாகத்துக்கு முன் 'பார்க்கிங்' பகுதியும் வரையறுக்கப்பட்டது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, தாறுமாறாக வாகனங்களை நிறுத்துகின்றனர். குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் 'ரவுண்டானா' முதல் கல்பனா ரோடு சந்திப்பு வரை, ரோட்டையொட்டி அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால், சென்டர்மீடியனுக்கும், வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்துக்கும் இடையே குறுகலான பகுதியில், அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு இடையே பஸ் ஸ்டாண்டில் இருந்து, மக்களும் ரோட்டை கடக்க முயல்வதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வருவதால், காலை, மாலை நேரங்களில், 'ரவுண்டானா' முதல் குறிப்பிட்ட துாரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதே போல், தளி ரோடு, திருப்பூர் ரோடு சந்திப்பு மற்றும் நகர எல்லை வரை தேசிய நெடுஞ்சாலையில் இதே பிரச்னை உள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி, மக்கள் அச்சமின்றி நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விபத்துகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி