முறைகேடு குடிநீர் இணைப்புகள்; பொங்கியெழுந்த சர்வ கட்சியினர்
அவிநாசி; பழங்கரை ஊராட்சி முன்னாள் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த நடராஜன் என்பவர் பழைய டேங்க் ஆபரேட்டர்களை மாற்றம் செய்து புதிதாக டேங்க் ஆபரேட்டர்களையும் குடிநீர் பணியாளர்களையும் முறைகேடாக நியமித்ததாக அனைத்து கட்சியினர் நேற்று அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,(கிராமம்) விஜயகுமாரிடம் புகார் அளித்தனர்.புதிதாக நியமிக்கப்பட்ட குடிநீர் பணியாளர்களும் டேங்க் ஆபரேட்டர்களாலும் பழங்கரை ஊராட்சி முழுவதும் தண்ணீர் பிரச்னை தலைதுாக்கி வருகிறது என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து கட்சியினரும் கடந்த நாட்களுக்கு முன் மனு அளித்திருந்தனர்.முறைகேடாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும், தற்போது பணியமர்த்தப்பட்ட குடிநீர் பணியாளர்கள், டேங்க் ஆப்பரேட்டரை நீக்கம் செய்யக வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் குடிநீர் பைப்புகளில் மீட்டர் பொருத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் (தி.மு.க.,), மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் கோபால் (இந்திய கம்யூ.,), பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில் (அ.தி.மு.க.,), முன்னாள் உறுப்பினர் சண்முகம், ஜெகநாதன் (காங்.,), பழனிசாமி (ம.தி.மு.க.,) ஆகியோர் கலந்து கொண்டனர்.அவிநாசிலிங்கம் பாளையம் பகுதியில் துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாயை உடனடியாக இணைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என சில மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். பி.டி.ஓ.,(பொது) ரமேஷ் , பி.டி.ஓ.,(கிராமம்) விஜயகுமார் ஆகியோர் உடனடியாக குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தி சீரான விநியோகம் தருவதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இப்பிரச்னையை தீர்க்காவிடில், 'சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்,' என்று சர்வ கட்சியினர் தெரிவித்தனர்.