உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு?

நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு?

திருப்பூர்: தாராபுரத்தில் நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடு நடப்பதாகவும், விதை நெல் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்காமல் ஏமாற்றுவதாகவும், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி பேசியதாவது: தாராபுரம் தாலுகா அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் வரும் மே மாதம் நெல் அறுவடை முடிவடைய உள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், ஒரு கிலோ நெல், 24.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப் படுகிறது.தாராபுரத்தில் 50 விதை நெல் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள், ஒவ்வொரு ஊருக்கும் புரோக்கர்களை நியமித்து, நல்ல விலைக்கு விதை நெல் வாங்குவதாக கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். அலங்கியத்தில் உள்ள இரண்டு விதை நெல் நிறுவனங்கள், 120 கிலோ கொண்ட ஒரு மூட்டை விதை நெல்லுக்கு, 2,800 ரூபாய் வழங்குவதாக கூறிவிட்டு, 1,350 ரூபாய்தான் தரமுடியும் என விவசாயிகளை மிரட்டுகின்றன. விதை நெல் நிறுவனங்களிடமிருந்து விவசாயிகளுக்கு உரிய தொகையை முழுமையாக பெற்றுக்கொடுக்கவேண்டும். இவ்வாறு, பழனிசாமி கூறினார்.தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து பேசியதாவது: தாராபுரத்தில், நெல் கொள்முதலுக்காக ஏழு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமராவதி பாசன பகுதிகளுக்கு அருகாமையில் இல்லாததால், விவசாயிகள், நெல் வியாபாரிகளுக்கும், விதை நெல் உற்பத்தியாளர்களுக்கும் கிலோ 17 ரூபாய் என்கிற சொற்ப தொகைக்கு விற்பனை செய்யவேண்டியுள்ளது.இச்சூழலை பயன்படுத்தி, அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகளிடமிருந்து வாங்குவதாக ஆவணங்களை பெற்றுக்கொண்டு, நெல் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். இதற்காக, கிலோவுக்கு 2 ரூபாய் வீதம் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.நெல் கொள்முதல் மையத்தில் நீண்ட காலம் பணிபுரிந்துவரும் அலுவலர் ஒருவர், தாராபுரத்திலுள்ள ஏழு நெல் கொள்முதல் மையங்களுக்கும் தலைவராக செயல்பட்டு, விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் தீவிர வசூல் வேட்டை நடத்தி வருகிறார். தாராபுரத்திலுள்ள நெல் கொள்முதல் மையங்களில் ஆய்வு நடத்தி, முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, காளிமுத்து பேசினார்.இவ்விரு புகார்களுக்கும், துறை சார்ந்த அதிகாரிகள் சரியான பதிலளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ