உயர்படிப்பு தொடர சிக்கலா? மாணவரிடம் குறைகேட்பு
திருப்பூர்; பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கல்லுாரி படிப்பை தொடர்வதில் உள்ள சிக்கல் என்ன என்பதை அறியும் நோக்கில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கட்டாயம் கல்லுாரி படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில், மாநில அரசு, மாணவ, மாணவியரை ஊக்குவித்து வருகிறது. 12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவ, மாணவியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவது; அவர்களது பெற்றோர் வாயிலாக அவர்களின் உயர்கல்வியை உறுதிப்படுத்தும் வகையிலான பணிகள், கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டன.அதன் தொடர்ச்சியாக, பிளஸ் 2 முடித்த பின் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவியரின் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்யும் நோக்கில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கான ஆலோசனைகள், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.