திருப்பூர் சாயக்கழிவால் நொய்யல் மாசுபடுகிறதா? அன்புமணி குற்றச்சாட்டுக்கு ஆலைகள் மறுப்பு
திருப்பூர்: 'நொய்யல் ஆறு சாயக்கழிவால் மாசுபடுவதாக கூறுவதில், எள்ளளவும் உண்மையில்லை; திருப்பூர் சாய ஆலைகளின் செயல்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்,' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருப்பூர் வந்த, பா.ம.க. தலைவர் அன்புமணி, நொய்யலில் சாயக்கழிவு கலப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் இதேபோன்று குற்றச்சாட்டுகளை ஏற்கனவே கூறியுள்ளனர். இதற்கு, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், பொதுசெயலாளர் முருகசாமி ஆகியோர் அளித்த விளக்கம்: உலக அளவில், திருப்பூரில் மட்டுமே, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும், 12 கோடி லிட்டர் சுத்திகரிப்பு செய்து, 10 கோடி லிட்டர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. திருப்பூரில், 350 சாய ஆலைகள் இணைந்து, 18 பொது சுத்திகரிப்புநிலையங்களை இயக்கி வருகின்றன; 100 தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்குகின்றன. ரூ.30 கோடி செலவு 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய, மாதம், 30 கோடி ரூபாய் வரை செலவாகிறது. சாய ஆலைகளில் இருந்து, சாயக்கழிவுநீர் செல்லும் குழாய், பொது சுத்திகரிப்பு நிலையம் செல்கிறது. அங்கிருந்து,'பிரெய்ன் சொல்யூஷன்' எனப்படும் அடர் உப்பு கரைசலை எடுத்துச்செல்லும் குழாயும், சுத்திகரிப்பு செய்த தண்ணீர் திரும்பி செல்லும் குழாயும் சாய ஆலைகளை நோக்கி செல்கின்றன. அனைத்து விவரங்களையும், மாசுக்கட்டுப்பாடு வாரியம், ஆன்லைன் மூலம் கண்காணிக்கிறது. மறுசுழற்சி முறை சுத்திகரிப்பால், தண்ணீர் பயன்பாடு குறைந்துவிட்டது. கழிவுநீரில் இருந்து தண்ணீர் பிரித்து எடுத்த பிறகு, அடர் உப்புக்கரைசல் தனியே பிரித்து எடுத்து மீண்டும் சாயமிட பயன்படுத்தப்படுகிறது.பின், சோடியம் குளோரைடு மற்றும் சோடியம் சல்பேட் தனியே பிரித்து எடுத்து, மறு பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள திரவக்கழிவு, கலவை உப்பாக (மிக்ஸர் சால்ட்) பிரித்து எடுத்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது; ஒரு சொட்டு கழிவுநீர் கூட வெளியேற்றப்படுவதில்லை. ஆரம்பத்தில், ஒரு கிலோ துணியை சாயமிட, 15 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. 'சாப்ட்புளோ' மெஷின் வந்த பிறகு, அது எட்டு லிட்டராக குறைந்தது. தற்போது புதிய தொழில்நுட்பத்தால், ஒரு கிலோ துணிக்கு சாயமிட, 3 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கெமிக்கல், சாயம், உப்பு, மின்கட்டணம் என, உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. சுத்திகரிப்புக்கு மட்டும், லிட்டருக்கு 25 பைசா முதல் 35 பைசா வரை செலவாகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, செலவு அதிகமானாலும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். ஜெர்மனி, வங்கதேசம் போன்ற நாட்டினரும், குஜராத், பஞ்சாப் என நம் நாட்டிலுள்ள மாநிலத்தவரும் நேரில் பார்த்து, சுத்திகரிப்பு பணியை பாராட்டியுள்ளனர். பல்கலை ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும், சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை பார்த்து வியந்து பாராட்டுகின்றனர். நேரடியாக பார்வையிடலாம் தமிழக அரசின் ஜவுளித்துறையும் மதிப்பீடு செய்துள்ளது. பொது சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டை பார்க்க விரும்பினால், எங்கள் சங்கம் மூலம் நேரில் பார்வையிட ஏற்பாடு செய்து கொடுப்போம். சாயக்கழிவுநீரால், நொய்யல் ஆறு மாசுபடுவதாக கூறுவதில், எள்ளளவும் உண்மை இல்லை. தேவையெனில், அனைவரும் பொது சுத்திகரிப்பு நிலையங்களை நேரில் ஆய்வு செய்யலாம். அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்லர்கள், திருப்பூர் சாய ஆலைகளின் செயல்பாட்டை குறைத்து மதிப்பிட வேண்டாம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியை ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.